உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் உள்ளத்தில் பிறந்த ஆசை மெதுவாகப் பரவியது. அடர்த்தியாக மண்டியது. இனிய கற்பனைகளை மலர வைத்தது.

ஊருக்குள் வந்து திரும்பிய ஒவ்வொரு பஸ்ஸும், அவற்றிலே வந்திறங்கிய- அல்லது, கிளம்பிச் சென்ற- ஒவ்வொரு ஆளும் அவளுடைய எண்ணங் களை, ஏக்கங்களை, கனவுகளை, வளர்க்கும் வாய்ப்பு களாகவே விளங்கினர்.

எப்பவாவது அவளுடன் சேர்ந்து விளையாடும் எந்தச் சிறுமியாவது "நான் ஊருக்குப் போயிருந்தேன். தாத்தா வீடு டவுணில் இருக்குதே" என்ற ரீதியில் ஆரம்பித்து, பெருமையடிக்கும் போது வள்ளி அம்மையின் உள்ளம் பொறாமை கொள்ளும் தனது எரிச்சலையும், பொறாமையையும் காட்ட அவள் "பிரவுடு பீத்துறா என்று கரிப்பாள்.

"பிரவுடு என்ற பதத்திற்கு அர்த்தம் புரிந்தோ, புரியாமலோ வள்ளி அம்மையைப் போன்ற சிறுமிகள் அதைத் தாராளமாக உபயோகித்து வந்தார்கள். அதை ஒரு ஏச்சுப் போல் உபயோகித்தார்கள். அதை அழுத்தமாக உச்சரிப்பதில் வள்ளிக்கு ஒரளவு திருப்தி உண்டாகும். அவ்வளவுதான். அவளுடைய ஆசையோ மேலும் கொஞ்சம் வளர்ந்திருக்கும்.

வள்ளி அம்மை, பஸ்ஸில் போய் வருகிறவர்கள் போக விரும்புகிறவர்களுக்கு அனுபவ மொழி புகன்றவர்கள் எல்லோரது பேச்சுக்களையும், சந்தர்ப்பம் கிட்டிய போதெல்லாம் கூர்மையாகக் கவனித்து வந்தாள். தானும் சிலரிடம் கேள்வி கேட்டு சில விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்.

அவ்வூரிலிருந்து டவுணுக்கு ஆறு மைல். பஸ் சார்ஜ் முப்பது காசு. போக முப்பது காசு, வர முப்பது

12