பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காசு; ஆக அறுபது காசு வேண்டும். ஒரு பஸ்ஸில் ஏறினால், அது முக்கால் மணி நேரத்துக்குள் டவுண் போய் சேரும். அதிலிருந்து இறங்காமல், இன்னொரு முப்பது காசு கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டால், அதே பஸ்ஸில் உடனேயே திரும்பி விடலாம். அதாவது, மத்தியானம் 1 மணிக்கு பஸ் ஏறினால் 1-45-க்கு டவுணில் இருக்கலாம். அதே பஸ்ஸில் 'பட்டணப் பிரவேசம்' மாதிரிச் சுற்றி வருவதனால் இரண்டே முக்கால் மணிக்குள் ஊருக்கு வந்து சேர்ந்து விடலாம்.

இந்த வாய்ப்பாட்டை வைத்துக் கொண்டு வள்ளி அம்மையின் பிஞ்சு மனம் ஏதேதோ கணக்குகளைப் போட்டது. சரியான விடை காண்பதற்காக, பல தடவைகள் அழித்துக் கழித்துத் திருத்திக் கஷ்டப் பட்டது. வழி வகைகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிரமாய் 'ஆராய்ச்சி' பண்ணியது.

முடிவில் ஒரு விடை அதற்குக் கிடைத்து விட்டது. ஒருநாள்.....

'இரண்டு மணி பஸ்' ஊர் எல்லையைத் தாண்டி, பெரிய ரஸ்தாவில் திரும்பியபோது “பஸ் நிக்கட்டும்! பஸ் நிக்கட்டும்!" என்று மெல்லிய குரல் ஒன்று எழுந்தது. சிறு கை ஒன்று முன் நீண்டு சைகையும் காட்டியது.

பஸ்ஸின் வேகம் குறைந்தது. கண்டக்டர் எட்டிப் பார்த்து, “யாரு வரப்போறாங்க? சீக்கிரம் ஓடி வரச் சொல்லு!” என்று கத்தினான்.

“பஸ் நிக்கட்டும். நான் ஏறணும்” என்று - மிடுக்காகக் குரல் கொடுத்தாள் எட்டு வயது வள்ளி

"ஓகோ, அதும் அப்படியா!” என்று சிரிப்புடன் சொன்னான் அவன்.

13