பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாவித்திரி அவன் தலையை எடுத்துத் தன் மடி மீது வைத்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள். நடுக்காட்டில் உதவிக்கு யார் இருப்பார்கள்? இப்படி திடீரென்று கணவர் விழுந்து விட்டாரே என்ற அதிர்ச்சியில் சாவித்திரி கல்லாகச் சமைந்துவிட்டாள்.

அப்போது திடீரென்று வானத்துச் சூரியனை மறைத்தபடி ஏதோ நிழல் அவளது முகத்திலே விழுந்தது. ஒரு பெரிய கரிய உருவம் நிழல் போன்று அவள் எதிரே நின்றது. அந்த உருவம் கீழே குனிந்தது. கருமையான அதன் நீண்ட கரம் சத்தியவானின் குரல் வளையைப் பிடித்து ஒரு கணம் அழுத்தியது. சாவித்திரி நிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் அந்த நிழலுருவம் நகரத் தொடங்கி விட்டது.