பக்கம்:எக்கோவின் காதல்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

எக்கோவின் காதல்

❖ கவியரசர் முடியரசன்


மாற்றுவதற்குரிய வீரர்கள் தாம் நமது கழகத்திற்குத் தேவை. விரைவில் நம் கையாலேயே-அதுவும் என்போன்ற பெண்கள் கையாலேயே கொளுத்தப்பட வேண்டும் இந்தக் கொடி. (கைதட்டல்) ஆம்; இழிவு நீங்கியபின் இந்தக் கொடி ஏன்? ஆகவே தோழர்களே! திராவிட இனத்தவர் அனைவரும் ஒன்று கூடினால் வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்குப்பின் அமைக்கப்போகும் திராவிட அரசியல் கொடியையும் நானே ஏற்றிவைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்று பணிவுடன் கூறி இக்கொடியை ஏற்றி வைக்கிறேன்” என்று வீரவுரையாற்றி அமர்ந்தாள் மதுரம்.

தள்ளாடிக்கொண்டே எழுந்தான் அர்ச்சுனன், “தோழர்களே! வீர இளைஞர்களே! மன்னிக்கவேண்டும். உங்கள் வேகத்தைத் தடுத்ததற்காக. பழிக்குப்பழி என்று துடிக்கும். உங்கள் இதயத் துடிப்பை நான் நன்கு அறிவேன். பதிலுக்குத் தாக்கும்படி நான் கூறியிருந்தால் அதனால் நமது உண்மையான எதிரிக்கு ஒரு சிறு அசைவு கூட ஏற்படப் போவதில்லை . இருபாலும் திராவிட இரத்தமே சிந்தும். அறிவியக்கத்தைச் சேர்ந்த நாம் அவ்வாறு நடந்து கொள்வது அழகன்று. மேலும் அவ்வாறு நடந்திருந்தால் இன்றையக் கூட்டம் குழப்பமாயிருக்கும். நமது குறிக்கோள் - நோக்கம் எல்லாம் பழிவாங்குவதில்லை. உயிரைப் பலிகொடுத்தேனும் இன்பத்திராவிடம் காண்பதுதான் நமது எண்ணம். அதைவிடுத்துச் சிறு சிறு பூசலுக்கு நாம் நமது ஆற்றலை-சக்தியை...” என்று சொல்லிக்கொண்டிருந்தவன் மயங்கி விழுந்து விட்டான்.