பக்கம்:எக்கோவின் காதல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல்

❖கவியரசர் முடியரசன்

119

எனக்கும் அதுதான் மிகப் பிடித்தமாயிருந்தது. ஆனால், சிற்சில சமயங்களில் பூச் சிதறிய ஆடையும் பொலிவு பெறும்; அவள் உடலில் சேர்ந்து. காது, மூக்கு, கழுத்து எதிலும் ஒரு நகை கூட இல்லை. கையில் ஒன்றோ, இரண்டோ வளையல் மட்டும் ஊசலாடும். அதுவும் கருப்புத்தான்! ஆனால், அவள் உள்ளத்தில் கருப்பில்லை என்பதை அவள் முகப்பொலிவு நன்றாக எனக்குச் சொல்லிற்று. அந்த விழியின் கருப்புத்தான் என்னை மயங்கச் செய்தது. அவள் கசங்காத மலர்! இது, என் எண்ணம். அவளிடத்துக் கொண்ட காதலால்தான் நான் நாள் தவறாது கடற்கரைக்குச் செல்வது. பலரும் அப்படித்தானே! கடலின் அழகிலே ஈடுபட்டு, காற்றின் நலத்திலே ஒன்றுபட்டுச் செல்வோர் எத்துணைப்பேர்? காதலின் விளையாட்டுப் பண்ணை தானே கடற்கரை! அந்தப் பண்ணையில் நான் மட்டும் இடம் பெறாமலிருக்க முடியுமா என்ன?

நான் தான் அவளிடம் காதல் கொண்டேன். அவள் விரும்பினாளோ என்னவோ எனக்குத் தெரியாது. நாங்கள் இன்னும் வாய்ப்பேச்சுக் கூடப் பேசியது கிடையாதே! நான் அவளைப் பார்ப்பேன். அவளும் என்னைப் பார்ப்பாள்; என்னைப் போல அல்ல. அவள் பார்வையிலே அமைதி தான் இருக்கும். அதை நானெங்கே பொருட்படுத்தப் போகிறேன். நான் காதல் நோக்குத்தான் நோக்குவேன். எப்படியும் அவளிடம் பேசி விட வேண்டுமென்பது என் எண்ணம். ஆனால், துணிவு வரவில்லை, இன்று அந்த எண்ணம் நிறைவேறியது. காரணம், என் மடிமீதிருந்த அந்தப் புத்தகந்தான்!

அவள் வந்து உட்கார்ந்ததும் கடலைப் பார்த்து விட்டு என்னையும் நோக்கினாள். பார்வை, என்மடிமீதிருந்த