பக்கம்:எக்கோவின் காதல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

“ஆம், கண்ணப்பா! இதில் என்ன உனக்குத் திடீர் என்று சந்தேகம் வந்தது?”

“சரி; மறுமணத்தை ஆதரிக்கிறாய் அல்லவா?”

“ஆம், மனமார ஆதரிக்கிறேன்”.

"கலப்பு மணம்...?”

"கட்டாயம் வேண்டுமென்று வற்புறுத்திக் கூறுகிறேன். என்னைப்பற்றித் தெரியாதா என்ன? ஏன் இப்படி எல்லாம் படபட என்று கேட்கிறாய்?”

"ஒன்றுமில்லை ஞானம்! இப்படி எல்லாம் சொல்லி விட்டுச் செயலில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ளுகிறாயே என்றுதான் வருத்தப்படுகிறேன்.”

“ என்ன கண்ணப்பா! அப்படி ஒன்றும் நான் மாறி நடந்ததாகத் தெரியவில்லையே. அதற்கேற்ற சந்தர்ப்பமும் என் வாழ்வில் இன்னும் குறுக்கிடவில்லையே?”

" உன் வாழ்க்கையை நான் சொல்லவில்லை. கலப்புமணம், மறுமணம் இவற்றை ஆதரிக்கின்ற நீ என் வாழ்க்கையைக் கேவலமாகப் பேசியிருக்கவேண்டாம்”. "உன் வாழ்க்கையைக் கேவலமாகப் பேசினேனா? இது என்ன விந்தை! கண்ணப்பா! யாரிடம் இப்படியெல்லாம் பேசுகிறாய்? நானா உன்னைக் கேவலமாகப் பேசுவேன்? அதுவும் உன் வாழ்க்கையையா?

"ஆம்; நேற்றுக் கழகத்தில் என்னை அவமானச் சின்னம் என்று சொன்னது என் வாழ்க்கையையல்லாமல் வேறென்ன?”