பக்கம்:எக்கோவின் காதல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

137

புதியதொரு சமுதாயத்தை அமைக்க - புத்துலகைக் காணத் திட்டம் தருவான். கண்மூடித்தனங்கள் மண் மூடிப்போக வேண்டும் என்பான். சமூகம் - பொருளியல் - அரசியல் மூன்றிலும் புரட்சி வேண்டும் என்று எக்காளமிடுவான். இவ்வளவும் அவன் கூறுவது உரை நடையிலே அன்று, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிதையிலே.

முன்னோர் காணாத உவமைகள் தாண்டவமாடும் அக் கவிதையிலே. உயிர்ப்புள்ளது - உணர்ச்சியுள்ளது - ஒப்பில்லாதது அவன் கவிதை. அவன் கவிஞன். புரட்சிக் கருத்துள்ள புதுமைக் கவிஞன். புறாவை - கடலில் காணும் சுறாவை, உழவனை - உணவின்றி வாடும் கிழவனை, மாலையை - ஆலைத் தொழிலாளியின் வேலையைப் பாடுவான், வைதிகரின் மமதையைச் சாடுவான். விதவைச் சகோதரிகளின் அழுகுரல் கேட்கும் அவன் பாட்டில். காலத்துக்கேற்ற கருத்துகள் ஓடி ஓடிச் சிரித்து விளையாடும். ஆனால் .... அவன் கவிதையின் பெருமையை - அறிவின் திறனை யார் அறிகின்றார்? அறிந்தாலும் போற்றுவார் யார்?

வறுமையிலே வாடுகிறது அவன் உள்ளம். அதையும் தாண்டித்தான் தருகிறான் புரட்சிக்கவிதைகளை. உண்மையான கவிஞன் உள்ளம், காசு பணத்தைப்பற்றிக் கவலைப்படாது. என்னும் உண்மையை அவன் வாழ்க்கையிலே தான் படித்தறிந்தேன்.

அவன் என் உயிர் நண்பன். அவனைப் பற்றி - அவன் கவிதையைப் பற்றி - வறுமையைப் பற்றி - அடிக்கடி எண்ணுவேன். அவனுக்கு உதவி செய்யவேண்டும் என்ற உணர்ச்சி என்னைத் தூண்டும். ஆனால் என்னிடமும் பொருள்