இரண்டு தந்தி
அப்பப்பா, விடுமுறை வாங்குவதற்குள் பெரும் பாடாய்ப் போய் விட்டதே! பெரிய அதிகாரிகளாக ஆகிவிட்டால் மனிதப் பண்பே மாறிவிடுகிறது; மற்றவர்களுடைய நிலையை உணருந் தன்மை அற்றே போய் விடுகிறது; என்னுடைய அவதி என்ன என்பதை அறியாமலேயே 'ஆபீசு வேலை 'ஆபீசு வேலை' என்று அழுதுகொண்டேயிருக்கிறார் 'மானேஜர்' என்று முணுமுணுத்துக் கொண்டே அவசர அவசரமாகக் 'கார்' நிலையத்திற்கு விரைந்துகொண்டிருந்தான் அரங்கசாமி.
அரங்கசாமி காரைக்குடியில் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வாலிபன். அவன் மனைவி தேவகி முதற் பிள்ளைப் பேற்றுக்காக அவளுடைய தாயகம் சென்றிருந்தான். முதற் பிள்ளைப் பேறானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். தேவகி பிள்ளைப் பேற்றால் மிகத் தொல்லைப் படுவதாகவும் அதனால் உடனே புறப்படவேண்டுமென்றும் அரங்கசாமிக்குத் தந்தி வந்திருந்தது. தேவகி மீது உயிரைவைத்திருந்தான் அவன். அதனால் உடனே புறப்பட 'மானேஜரிடம்’ விடுமுறை வாங்குவதற்குப் பட்டபாட்டை நினைத்துக்கொண்டு தான் கார் நிலையத்திற்கு வந்தான்.