பக்கம்:எக்கோவின் காதல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

முடியும்? பெரும்பாலும் இன்றைய உலகில் எல்லோருமே பிச்சைக்காரர்களே? ஆனால் ஒவ்வொருவருக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடு உண்டு. ஒரு சில கொழுத்த பணக்காரர்களைத் தவிர மற்றைய யாவரும் வெவ்வேறு வகையான பிச்சை வாழ்வுதான் நடத்துகிறார்கள். இவ்வளவு பேரையும் அரசாங்கம் எப்படிக் கவனிக்கமுடியும்? நமக்குள்ளே பொருளாதார சமத்துவம் ஏற்பட்டால் ஒழிய இந்தச் சிக்கல் தீராது. அந்தச் சமத்துவத்தைப் படைப்பதற்கும் உரமுள்ள தீவிரக் கருத்துள்ள ஓர் அரசாங்கந்தான் வேண்டியிருக்கிறது” என்று பெரிய அரசியல் வாதியைப் போல எண்ணமிட்டுக்கொண்டே அவளைப் பார்த்தவண்ணமிருந்தான்.

அவளும் ஒவ்வொரு வண்டியாகப் பிச்சை கேட்டுக் கொண்டே வந்தாள். ஒருசிலர் அவளை அதட்டித் துரத்தினர். மற்றும் சிலர் கிண்டல் செய்தனர். 'எடுப்பது பிச்சை - இடுப்பில் இருப்பது பிள்ளை . திருட்டுக் கழுதைகள், சும்மா ஊரை ஏய்க்கிறதுகள்' என்று சிலர் உண்மைகளைக் கண்டுபிடித்தவர்களைப் போலப் பேசினர். ஆனாலும் இரண்டொருவர் இரக்கங்கொண்டு காசுகள் தராமலும் இல்லை. அப்படிக் கொடுப்பவர்களைப் பார்த்துப் பக்கத்திலிருக்கும் 'கனவான்கள்' இவர்களுக்கெல்லாம் கொடுக்கக் கூடாது சார்! மேலும் பிச்சை எடுக்கத்தான் உதவி செய்தவர்களாவோம்' என்று உபதேசத்தில் இறங்கினார்கள்.

அப்போது பலமாக 'ஆரன்' அடித்துக்கொண்டே ஒரு பெரிய கார் ஒன்று நிலையத்துக்குள் வேகமாக நுழைந்தது. சத்தத்தைக் கேட்டு அவளும் ஓடிவந்தாள் அந்தக் காரை நோக்கி. அதற்குள் அதைப் பின் தொடர்ந்து மற்றொரு வண்டியும் மிக வேகமாக நுழைந்தது. ஓடிய அந்தப்