பக்கம்:எக்கோவின் காதல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

17

வாற்றியதைக் கேட்ட மல்லிகா அவன் தோற்றத்திலும் ஆணித்தரமான பேச்சிலும் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டாள். அதிலிருந்து எக்கோவுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதத் தவறுவதில்லை.

சில நாள்களுக்குப் பிறகு அவளிடமிருந்து வழக்கம் போல் ஒரு கடிதம் அவனுக்கு வந்தது. அதையும் படித்தான்.

அன்புடையிர்! வணக்கம். நான் இத்தனை கடிதங்கள் எழுதியும் ஒரு விடை கூட உங்களிடமிருந்து வரவில்லையே! ஏன்? எழுத நேரமில்லையா? அல்லது என்னைப் புறக்கணிக்கிறீர்களா? புறக்கணித்தாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. என்னுடைய குறிக்கோளில் - இலட்சியத்தில் நீங்கள் முக்கிய இடம் பெற்று விட்டீர்கள். உங்களுடைய கொள்கைகளில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது.

எங்கள் கல்லூரிக்கு அய்ந்து நாள்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அவ்விடுமுறையில் சென்னைக்கு வருகிறேன்.

உங்கள்
மல்லிகா

படித்து முடித்துவிட்டு ‘இவள் ஏன் நம்மிடம் வர வேண்டும்! ஒருவேளை நம்மிடம் காதல் கொண்டிருப்பளோ!’ என்று எண்ணமிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். யாரோ மாடிப்படியில் ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அழகிய இளம் பெண்ணொருத்தி சிரித்த முகத்துடன் வந்து கொண்டிருந்தாள்.

வணக்கம் என்றாள் வந்தவள்.