பக்கம்:எக்கோவின் காதல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

'நான் இதற்குத் தானா இங்கு வந்தேன்? இதுதான் பொங்கல் விழாவா? நான் காதல் அளவிலேதானா ஒவ்வொருவர் குறையையும் நிறை செய்யமுடியும்? என் முக்கிய குறிக்கோள் அதுவன்றே. ஏழமையை அதன் பகைமையாகிய சுரண்டல் தன்மையை ஒழித்துக் கட்டுவது தான் என் குறிக்கோள். காதலே குறிக்கோளாக இருந்தாலும் இருவருக்கும் எப்படிக் காதலைப் பகிர்ந்து கொடுக்க முடியும்? அய்யா! என் உள்ளத்தில் வேதனைப் புயலை எழுப்பிவிட்டுச் சென்று விட்டாளே!' இவ்வாறு உழன்றுகொண்டிருந்தது அவன் மனம்.

இரவு, படுக்கையில் இருந்தான் எக்கோ.

'ஏன் இரவு சாப்பிடவில்லை! இந்தப் பாலையாவது அருந்துங்கள்' என்று பாலைக் கொடுத்தாள் மல்லிகா.

படுக்கையிற் சாய்ந்துகொண்டிருந்த எக்கோ அதை வாங்கிக் குடித்தான்.

'ஏன் ஒருமாதிரியாக இருக்கிறீர்கள்?'

'ஒன்றுமில்லை'

மணி பத் தடித்தது. பதினொன்றும் அடித்தது. அவன் அப்படியே சாய்ந்த வண்ணம் என்னென்னவோ எண்ணிக்கொண்டிருந்தான். கடிகாரத்தின் 'டக் டக்' ஒலியைத் தவிர வேறு ஒலியே இல்லை அங்கு. அந்த ஒலி ஒவ்வொன்றும் அவன் சிந்தனையைத் தட்டிக்கொடுப்பது போல் இருந்தது. மல்லிகாவும் அருகில் படுத்திருந்தாள்.

‘என்ன! நான் பேசுவதற்கெல்லாம் சரியான பதிலையே காணோமே! உங்கள் மனம் காதல் நீரற்ற பாலைவனமா என்ன?’ என்றாள்.