பக்கம்:எக்கோவின் காதல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

31

'ஆம், என் உள்ளம் பாலைவனந்தான். மக்கள் வாழ்வு பாலைவனமாய் இருக்கும்வரை என்மனம் வறண்ட நிலந்தான். அங்குக் காதல் நீரேது? இன்பப் பூக்கள்தாம் எப்படி மலர் முடியும்? அந்த நிலத்தில் மலரைப்பெற விரும்புகிறாய் நீ!'

'இல்லையில்லை; நீர்வளமிக்க சோலையிலேதான் நான் மலரைத் தேடுகிறேன்'.

'நீ நினைப்பது தவறு'

'தவறா? அப்படியானால் என்னை மணந்து கொண்டிருக்க வேண்டாமே' என்று ஊடல் கொண்டவள் போல் விளையாட்டாகக் கேட்டாள்.

'நானா மணந்தேன்? நீயல்லவா என்னை மணந்து கொண்டாய்! நானே மணந்திருந்தாலும் காதலின்பம் ஒன்றுக்காக மட்டும் மணந்து கொள்ளவில்லையே!' புரட்சி இயக்கத்தில் நானும் உங்களோடு பணியாற்றுவேன். என்று நீ சொல்லியதை உண்மை என்று நம்பினேன் அதனால் உனக்குத் துணைவனாகச் சம்மதித்தேன். என் மனத்தில் காதலுக்குத் தலைமையிடங் கொடுத்தால் தியாகத் தீயில் குதிக்கும் பொழுது என் இதயம் பலமாகத் தடுக்கும். அப்பொழுது என் நெஞ்சைப் பிளந்து இதயத்தை எடுத்து நசுக்கிவிடும் ஆற்றல் என்னிடம் இல்லாமற் போய்விடும். போகவே துரோகி - கருங்காலியாகி விடுவேன்' என்று அவன் உதட்டிலிருந்து சிதறி வந்தன இந்தப் பொறிகள். அப்பொழுது அவன் முகம் கருத்துக் காணப்பட்டது. கண்கள் சிவந்திருந்தன. கண்ணில் ததும்பிக் கொண்டிருந்த நீர், துளியாக அவள் மேல் விழுந்தது. துளி, நெருப்பெனச் சுட்டது. நிமிர்ந்து பார்த்தாள்.

'என்ன! இதற்காகவா இப்படிப் பேசுகிறீர்கள்! நான் இளம் பெண்தானே. இயற்கை உணர்ச்சியின் வயமாகிவிட்டேன்.