38
எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. சிதறிச்சென்றனர் மக்கள். ஆனால் ஒரு சிலர் கலைய மறுத்தனர். கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது. மக்கள் திக்குமுக்காடினர். போலீசாரின் கைத் தடிகள் சுழலத் தொடங்கின. குதிரை வீரர்கள் உள்ளே நுழைந்தனர், அடி பொறுக்க முடியாமல் மக்கள் சிதறுண்டு ஓடினர். சிலர் அடிபட்டு விழுந்தனர். சிலர் மேடையில் ஏறினர், அங்கும் தடியடி. பலருக்குப் பலத்த காயம். மேடையில் ஏற்பட்ட நெருக்கத்தால் மல்லிகாவின் அருகிலிருந்த மஞ்சுளா கீழே விழுந்து விட்டாள். தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றாள். தலையில் பலத்த அடி விழுந்தது. கீழே சாய்ந்து விட்டாள்.
மல்லிகா கைது செய்யப்பட்டாள். மஞ்சுளா மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் காயமடைந்த மக்களும் எடுத்துச் செல்லப்பட்டனர்.
கூட்டம் நடந்த இடம் இப்பொழுது ஒரே அமைதி! பார்க்க முடியாதபடி சோகம் நிறைந்திருந்தது. இரத்தம் அங்கங்கே சிந்திக் கிடந்தது. ஆனால் அந்த இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் நாளைக்கு எத்தனை வீரர்களை - தியாகிகளை - எத்தனை எக்கோக்களை - மல்லிகா - மஞ்சுளாக்களை உண்டாக்கப் போகிறது என்று யார் உணரமுடியும்? அந்த இடம் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இடம் ஆயிற்று என்பது மட்டுமல்லாமல் மக்கள் நெஞ்ச ஏடுகளிலே இரத்தத்தால் எழுதப்பட்ட எக்கோ நகர் ஆயிற்று.