எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
59
என்று எண்ணிவிட்டு, அடுத்து அதை உரிமைப் பொருளாக்க எண்ணுவது, நீ உன் உள்ளத்தையே நம்பவில்லை என்று தான் பொருள்படும். மனம்போன போக் கெல்லாம் போய்க்கொண்டிருந்தால் உலக ஊழியனாக முடியுமா? சீர்திருத்தத் தொண்டு செய்ய முடியுமா? எண்ணிப்பார்! காதலின் ஏவலுக்கு ஆளாகாமல் எண்ணிப்பார்?” என்று முதல்வர் கூறினார்.
இரண்டாமவர் “அவள் காதலை நீ புறக்கணித்து விட்டதால் மட்டும் உன்னை உறுதியுடையவன் என்று கருதுகிறாயா? அது தவறு . அப்படியானால் நீ பெருங்கோழையாகிறாய் சமூகத்தை எதிர்த்து நிற்க அஞ்சுகிறாய்! விதவை பிழிந்தெடுக்கப்பட்ட சக்கைதானே என்று எண்ணுகிறாய். இந்தக் கோழைமனம் இருக்கும் வரை நீ எங்கே தியாகம் செய்யப் போகிறாய்! அது கிடக்கட்டும். உன் நண்பன் வேலனிடம் அன்று உறுதி மொழி கொடுத்தாயே அது என்னாவது? அவன் தான் என்ன நினைப்பான்! வாய்ச் சொல்லில் வீரம் பேசும் வஞ்சகன் என்று தானே உன்னைக் கருதுவான். இதுதான் உன் உறுதியா? மனக்கட்டுப்பாடா? சொல்லியதைச் செயலிற் காட்ட முனைவதை மனம்போன போக்கு என்பது குறைமதியினர் கூற்றல்லவா அஞ்சுகிறாயா? அச்சத்தை விடு. எதிர்ப்பைத் துச்சமென எண்ணு! வா! வளங்காண வா! வாகை சூட வா!" என்றார்.
நான் நிமிர்ந்தேன் இருவரும் மறைந்தனர்.
'கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போகட்டும்' யாரோ நெடுந்தொலைவில் பாடுவது போல் மெலிந்த ஒசை என் காதில் மோதியது. சரி. நான் கோழையல்லன். உறுதி மொழியைப் புறக்கணிக்கும் உள்ளமுடையவனுமல்லன்.