பக்கம்:எக்கோவின் காதல்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

எண்ணமும் வளர்ந்து கொண்டே வந்தது. மாடிப் பக்கம் செல்வதே கிடையாது. ஒரு தனி அறையில் படுத்துக் கொள்வார். முதலியாரின் மாற்றம் மங்களத்திற்கு மனத் தடுமாற்றத்தைத் தந்தது.

மற்றொரு நாள் இரவு மணி ஒன்று அல்லது இரண்டு இருக்கும். சிரிப்பொலி கேட்டது. அப்படியொன்றும் வெடித்த சிரிப்பன்று. சிறிய ஒலி தான். இருந்தாலும் உறங்காமலே இருந்த முதலியார் செவியில் அவ்வொலி விழுந்தது. ஒலி வந்த திசை நோக்கி நடந்தார். தன் மகன் அறையிலிருந்து தான் அந்த ஒலி வந்தது என்பதை மெய்ப்பித்து விட்டது. அங்கிருந்து வரும் பேச்சொலி பூத்துக் காய்த்திருந்த அந்த எண்ணம் பழுக்கத் தொடங்கி விட்டது.

கதவின் துவாரத்தின் வழியாகப் பார்த்தார். இருவுருவங்கள் தெரிந்தன. படுக்கையறை வெளிச்சத்தால் சரியாகத் தெரியவில்லை.

பேச்சை உற்றுக் கேட்டார். “எனக்குப் பயமாகவே இருக்கிறது. அவர் பார்த்து விட்டால் என்ன ஆகும்” இது பெண் குரல். “நானிருக்கும் பொழுது உனக்கென்ன பயம்?” அவர் பார்த்தால் தான் என்ன இனி மேல் நீ என் மனைவி. ஏதாவது தடை ஏற்பட்டால் நாம் சிங்கப்பூருக்குச் சென்று விடலாம்” இஃது ஆண் குரல்.

இதற்கு மேல் அவர் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை . பழம் பயன் தரத் தொடங்கிவிட்டது.