பக்கம்:எங்கே போகிறோம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர்ச்சி-மாற்றம் O 59

ஒரு காலத்தில் அரசியற் கட்சிகள் சாதி, மதங்களைச் சார்ந்து இருப்பதை விரும்பவில்லை, மறுத்தன. இன்று அரசியற் கட்சிகள் வெளிப்படையாகவே சாதிகளை, மதங்களை, அவற்றிற்கிடையே மோதல்கள் ஏற்படுவதை விரும்பி வரவேற்கின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சாதியை, மதத்தை அரசியல் காரணமாகப் பயன்படுத்துவதைத் தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும், கலாச்சாரம் என்ற போர்வையில் சாதி, மத வெறுப்புணர்வுகள் தலையெடுத்தாலும் தடைசெய்ய வேண்டும். அனுமதிக்கக் கூடாது.

மனிதனின் சிந்தனைக்கு விலங்கு போடாமல் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்பட அனுமதித்தால் வளர்ச்சி தோன்றும்; மாறுதல்களும் ஏற்படும். மனிதன் பயத்திலிருந்து விடுதலை பெற்று, பகுத்தறிவுத் தடத்தில் என்று செல்லத் தலைப்படுகின்றானோ, அன்றே வளர்ச்சிக்குரிய வாயில் தோன்றும்; தென்படும்.

இருட்டறையிலிருந்து என்று வெளியுலகுக்கு மனிதன் வருகின்றானோ அன்றுதான் மனிதன் உண்மையிலேயே மாறுவான். வளர்ச்சியும் நிகழும்; மாற்றங்களும் ஏற்படும்.

மனிதன், வரலாற்றை உந்திச் செலுத்தும் ஆற்றல் வாய்ந்தவன், மனிதனே வரலாற்றின் உயிர்ப்பு. அவனுடைய மாற்றமே வரலாறு; இயக்கம்! மனிதன் இரண்டு எஜமான்களுக்குச் சேவை செய்ய இயலாது. சுயநலம் தவிர, மற்றொன்று அறியாத மனிதன், நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய இயலாது.

அதனால் வளர்ச்சியும் ஏற்படாது. மாற்றங்களும், வாழ்வதற்குரிய வாய்ப்புக்களும் அருகிப்போகும். நாம்