பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

உலக ஒளி


மரியாதை செய்வதையும், வேறு பல வெளிநாட்டுக்காரர்கள் வந்து தமது அன்பு வணக்கங்களைச் செலுத்திப் போவதையும் படங்களில் காண்கிறோம். இதன் பொருள் என்ன ? வெளி நாட்டுக்காரர்கள் வந்து வணங்குவதன் சூட்சுமம் என்ன ? அவர்களை எல்லாம் படம் எடுத்துப் பிரமாதமாக எழுதி. 'பார் ! பார் !! அவர்கள் செய்யும் அஞ்சலியை' என்று பெருமையோடு வெளியிடுகின்றோமே, அவர்களெல்லாம் யார் ? காங்கிரஸ்காரர்களா ? காங்கிரசிலே இருந்தறியாதவர்கள்! அது மட்டு மல்ல காங்கிரசையே எதிர்த்தவர்கள்! இந்த நாட்டுக்குச் சொந்தமில்லாதவர்கள். வெளிநாட்டினர்  !

அவர்களெல்லாம், காந்தியாரின் நினைவுச் சின்னத்தைக் கண்டு. பூரிப்புக் கொள்வதை விட--மரியாதை செய்வதை விட நான் செலுத்தும் அன்பு, எந்த அளவுக்குக் குறைந்தது என்று கூற முடியும்? அவர்களைவிட நான் செலுத்தும் மரியாதை, மட்டமாகவா இருக்கும் ?

அவர்கள் மரியாதை செலுத்தும்போது அகமகிழும் உங்களுக்கு, அரசியல் ஆவேசமும், ஆத்திரமும் ஏற்பட லாமா! மலர் தூவுகிறான் வெளி நாட்டான். அதைவிட நான் தூவும் மலர் எவ்விதத்தில் கெட்டதாகும் ? இந்தப் பொது அறிவு--அரசியல் விளக்கம் நம்மவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். ஆனால், நாம் நினைப்பது போல, அவ்வளவு சுலபத்தில் இங்கே வந்துவிடாது. ஏனெனில், வருடத்துக்கு ஒரு தடவை நமக்குள் இன்னும் மன்மதன் எரிந்தானா? எரிய வில்லையா ? என்கிற பிரச்னையே தீரவில்லையே ! மன்மதனைக் கண்டவர்கள் யாரும் கிடையாது சண்டையோ, ஓயாமல் நடக்கிறது ! இதைப்போல எத்தனை நாளைக்கு இருக்க முடியும் ?