உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எண்ணக்குவியல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

எண்ணக் குவியல்

சுற்றுவதற்கே இவ்வளவு சக்தி இருக்குமானால், மற்ற மந்திரங்களுக்கும். மற்றவைகளுக்கும் எவ்வளவு சக்தி இருக்கும்!’ என்று எண்ணினேன். உடனே இதைப்போல மற்றொரு பங்கு கொண்டுவரச் சொன்னேன். கொண்டு வந்தார்கள். கொண்டு வந்ததைத் தலையைச் சுற்றிப் போடும்படி சொன்னேன். மூன்று முறை சுற்றி மூன்று முறை துப்பச்செய்து அடுப்பிற் போட்டார். சிறிதும் நெடிவீச வில்லை.

என் கையிலிருக்கிற மற்றொரு பங்கைத் தலையைச் சுற்றாமல் அடுப்பிற் போடும்படி சொன்னேன். போட்டார். அதிலும் கொஞ்சம்கூட நெடிவீசவில்லை, ஏன் இப்படி?' என்று கேட்டேன், என் தமக்கையாருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

பிறகு இரண்டொரு நாள் இதே வேலையாய் இருந்தேன். உண்மையைக் காண முடிந்தது. மிளகாய் நெருப்பில் விழுந்து கருகினால் அதிகம் நெடிவீசுகிறது, அடுப்பு நன்றாக எரியும்போது, மிளகாய் விழுந்தால் குறைந்த நெடியே உண்டாகிறது, அடுப்பில் மண்விழுந்து கருகுவதால் ஒரு மட்கு வாடை உண்டாகிறது, இந்த மட்கு வாடை அந்த நெடியையும் அடியோடு மறைக்கத் துணை செய்கிறது. கூரைக்கீற்று அடுப்பெரிய நல்ல துணை செய்கிறது. உப்புச் சடச்சடவெனப் பொரிந்து ஒரு மனக் கிளர்ச்சியை உண்டாக்குகிறது என்பவைகள் தெளிவாகத் தென்பட்டன.

இக் கற்பனையும், கற்பனையால் விளைந்த நம்பிக்கையும், நம்பிக்கையை வலுவாக்கத் தேடிக் கண்டு பிடித்த பொருள்களும், அப்பொருள்கள் ஒன்றுக் கொன்று துணைபுரியும் செயலும் ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணிப்பார்க்கும்பொழுது நமது உள்ளம் வியப்படைகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/43&oldid=1253037" இலிருந்து மீள்விக்கப்பட்டது