பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைக்கும்! அதனால்தான் அவற்றை விடுத்து யாருக்கும் இடர் விளைவிக்காத ஒரு அரசியல் வரலாற்று ஏட்டினை அண்ணாவின் கையெழுத்து கொண்டே நாளை மே 3 ஆம் நாள் முதல் முரசொலியில் வெளியிடுகிறேன்.

இந்தக் கையெழுத்துப் பிரதி நோட்டுப் புத்தகத்தை மத்திய நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் தம்பி ராஜாவிடம் நேற்றைய தினம் இரவு காட்டினேன். அண்ணாவின் கையெழுத்துக்களை ஒரு சேர இத்தனை பக்கங்களைப் பார்த்ததும்; அவர் உணர்ச்சிவசப்பட்டு அந்த எழுத்துகளைத் தொட்டுக் கும்பிட்டதும் கண்களில் ஒற்றிக் கொண்டதும் நினைவில் நிலைத்துவிட்ட நிகழ்ச்சியாகும்.

நாற்பதாண்டு காலம் கண் போலக் காத்த இந்தக் கருவூலத்தை இனியும் வெளியிடாமல் இருப்பதா? எப்போது வெளியிடலாம்? என்று என்னைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்விக்கு; இதனை வெளியிடுவதற்கான உரிய நேரம் இதுதான் என்று விடை கிடைத்தது.

எனவே இப்போது வெளியிடப்படுகிறது. இதனை நமதியக்கப் பயணத்தில் எதிர்ப்பட்ட திருப்பு முனையில் எவ்வளவு திறமையுடன் சமாளித்து விபத்தின்றி கழக வாகனத்தை அண்ணா செலுத்தினார் என்பதற்கு இந்தக் கருவூலமே கண்கண்ட சான்று.

இளைய தலைமுறையினர்க்கு இப்போதெல்லாம் இது போன்ற விஷயங்களை – வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவது; நான் எண்ணி வருந்துகின்றவற்றில் ஒன்றாகும்.

இனியாவது கழக உடன்பிறப்புகளும் இளைய தலைமுறையினரும் இழந்துவிட்ட அந்த ஆர்வத்தை – ஒதுக்கி வைத்துள்ள அந்த அக்கறையை – திரும்ப் பெற்று திராவிட இயக்கத்துக்கு எல்லா வகையிலும் அறிவு வளம் சேர்த்திட வாரீர் என அழைக்கிறேன்.

அன்புள்ள,

மு. க.