பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவசரப்பட்டு இறங்குவதில்லை. அவர் தலைமையேற்றிருந்த கால கட்டத்தில் கல்லக்குடி போராட்டம் – குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் – ரயில் நிறுத்தப் போராட்டம் – இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் – விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம் என எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

ஆனால் பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துவதென்றால்; கழகத்தினர் வாழ்வு பறிபோகும் என்பதுடன் கழகமே பறிபோகும் என்ற உண்மையை; எவ்வளவு வலிவுமிக்க வாதங்களை எடுத்து வைத்து அண்ணா கருத்தறிவித்தார் என்பதை இந்த “எண்ணித் துணிக கருமம்!” என்ற அவரது கையெழுத்து உரை தெளிவாக்குகிறது.

“ஆகா! திராவிட நாடு கொள்கையை விட்டு விட்டார்கள், கோழைகள்!” என்று சில கட்சியினர் எள்ளி நகையாடினர். அப்போதும்; காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைச்சராக இருந்த பெரியவர் பக்தவத்சலம் அவர்கள்; பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க. கைவிட்டுவிட்டு; இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டு நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்பு தர முன்வந்தமைக்காகப் பாராட்டு தெரிவிப்பதாக அறிவித்தார்.

அவரையும் மீறி அவரது காங்கிரஸ் கட்சியினர் – மற்றும் மாற்று முகாமில் இருந்தோர் – தி. மு. க. எடுத்த முடிவு குறித்துப் பழித்தும் இழித்தும் பேசாமல் இல்லை. அவர்களின் நோக்கம் என்ன என்பதை அறிந்திருந்த அண்ணா அவர்கள் அதையும் இந்தக் கையெழுத்துக் கருவூலத்தில் ஆங்காங்கு சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இந்தக் கருவூலத்தை இவ்வளவு நாள் வெளியிடாமல் இருந்த காரணம் என்ன?

எப்படி இத்தனை நாள் பத்திரப்படுத்தினாய்?

இந்தக் கேள்விகள் நிரம்ப எழத்தான் செய்யும்; எழுகின்றன!

என்னிடம் பத்திரமாக இருக்கும் வேறு சில விஷயங்கள் எல்லாவற்றையுமே வெளியிட்டுவிட முடியுமா? அவை எத்தனை பேருடைய முகத்தை சுளிக்க வைக்கும்; அகத்தை சுருங்க