பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

உடன்பிறப்பே,

திர்ப்படும் நண்பர்களோ, உடன்பிறப்புகளோ எவராயினும் கேட்கின்றனர்; எப்படி “எண்ணித் துணிக கருமம்” என்ற தலைப்பில் அண்ணா அவர்களே தன் கைப்பட எழுதிய அந்த நோட்டுப் புத்தகத்தை 40 ஆண்டுகள் பாதுகாத்து வந்தீர்கள் என்று!

தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் அதே கருத்தை அவர் கைப்பட ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்தார். அதை என் அன்புக் கண்மணியும், அண்ணாவின் இதயத்தில் சிறந்த இடம் பெற்றவருமான தம்பி முரசொலி மாறனிடம் கொடுத்து வைத்திருந்தார். அதில் சில பக்கங்களை அவர் வீட்டில் கறையான் நுகரத் தொடங்கிய காரணத்தால் அந்தக் கையெழுத்துப் பிரதியை மாறன், முரசொலி அலுவலகத்தில் பத்திரப்படுத்தியிருந்தார். 1991 ஆம் ஆண்டு ஆளுநர் ஆட்சியில் மாற்றுக் கட்சிக் குண்டர்கள் முரசொலி அலுவலகத்தைத் தீக்கிரையாக்கியபோது, முரசொலி பைல்கள், புத்தகங்களுடன் அண்ணாவின் அந்த ஆங்கிலக் கையெழுத்துப் பிரதியும் சாம்பலாக்கப்பட்டுவிட்டது.

அனைத்து ஆபத்துகளையும் தாண்டி என்னிடம் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டதுதான் அண்ணா எழுதிய 301 பக்கங்கள் கொண்ட இந்தக் கையெழுத்துப் பிரதி நோட்டுப் புத்தகம் “எண்ணித் துணிக கருமம்” என்பதாகும்.

இது தி. மு. கழகத்தின் பலம் – பலவீனம் இரண்டையும் ஒளிவு மறைவின்றி அண்ணா அவர்களால் படம் பிடித்துக் காட்டப்படும் நேர்மையான விமர்சனம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அடக்குமுறையேற்கக் கூடிய – தியாகம் செய்யக் கூடிய – இழப்புகளை சந்தித்துத் தீரவேண்டிய எந்தவொரு போராட்டமாயினும்; அதனை அண்ணா அவர்கள்; தன்னுடைய அல்லது தன்னுடன் இருக்கக் கூடிய நாலைந்து பேர்களின் மனத்திண்மையை மட்டும் கணக்கில் கொண்டு அந்தக் களத்தில்