பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று
தள்ளாடும் ; விழும் ; எழும்; பின்னிற்கும் ; சாயும்
தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள்;
தோளசத்து தாளசந்து மாடி விட்டுப்
பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து
படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந் தன்னில்,
நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம்
நாவறளக் கத்துதல்போல், பேசலுற்றார்;
வடநாடு செல்கின்றான் அந்தப் பையன்,
உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்!
நடப்பானா? தூரத்தைச் சமாளிப்பானா?
நான் நினைக்க வில்லை என்று மகிழ்ச்சிகொண்டு
திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள்.
சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய்
வடக்கென்றால் சாக்காடென் றேதான் அர்த்தம்!
மாளட்டும்!" என்றுரைத்தாள் மறை நாய்கன் தான்.
வெள்ளீயம் காய்ச்சிப் பூங்கோதை காதில்
வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை,
கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக்
கடல்நீரில் சுறப்போலப் படுக்கை தன்னில்
துள்ளி, உடல் துவள்வதன்றித், தந்தை தாயார்
துடுக்குமொழி அடக்குவதற்கு வாய்தா னுண்டா?
தள்ளஒண்ணா முடிவொள்று கண்டாள் அங்குத்,
தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே.

45