பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

சு. சமுத்திரம்

இல்லை என்பதை அறிந்தும், நடுத்தர வயதில் தனது கணவனுக்கு தானே முன்னின்று திருமணம் நடத்தினார். இரண்டாவதாக வந்தவளுக்குப் பிறந்த குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைத்து மகிழ்ந்தார். ஆனால் அவருக்கோ பல சோதனைகள். கிராமத்தை விட்டு நகரத்திற்கு வர வேண்டிய கட்டாயம். நான் கூட அவரிடம் கணவருக்கு திருமணம் செய்து வைத்தது தவறு என்று வாதாடினேன். அவரால் அதை மறுக்கவும் முடியவில்லை. உடன்படவும் முடிய வில்லை. ‘ஏசுவே’ என்று ஒரே பதில்தான். உத்தமியான இந்த மூதாட்டி இப்படி அல்லல்படுவதை நினைக்கும் போது சாமர்செட் மாம் எழுதிய மனிதபந்தம் (HUMAN BONDAGE) என்ற நாவல் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு கால் ஊனமுற்ற மாணவன் பொருமிக் கொண்டேயிருப்பான். அவனுடைய ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு “ஆண்டவர் உலக பாவத்தை சுமப்பதற்காக உனக்கு ஒரு சிலுவை கொடுத்திருக்கிறார். உன்னால் தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆகையால் நீ பெருமைப்படு, சிறுமைப்படாதே” என்பது மாதிரியான வாசங்கள் வரும். இவை எனக்கு மிகவும் பிடித்து மனதில் ஒலித்துக் கொண்டிருப்பவை. இதில் எனது நம்பிக்கை முக்கியமல்ல. இந்த மாதிரியான மானுட சேதங்கள் வாழ்வதற்கு இந்தக் கருத்து ஒரு மாமருந்து என்பதே காரணம்.

பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து எழுதிய பிரபலமான “விவிலியமும் தமிழும்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நானும் உரையாற்றினேன்.