பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

213

கூத்தாண்டவரான அரவான், மகாபாரதப் போரில் பலியாக்கப்பட்டதை நினைவுப்படுத்தும் வகையில் ஒரு பொம்மையை பலியிடும் போது இவர்கள் தாலிகளை கழற்றி விட்டு, பூப்பொட்டுகளை கலைத்து விட்டு, வெள்ளைச்சேலை கட்டி ஒப்பாரி வைப்பார்கள். பின்னர் ஒரு வாரம் கழித்து தத்தம் இருப்பிடங்களுக்கு கலைத்து போவார்கள்.

இந்த அலிகளின் பேச்சு, முகபாவம், சண்டை, சச்சரவு, சந்தோஷங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. அவர்களிடம் பேசிப் பார்த்தேன். மனதுக்குள்ளே அழுது கொண்டிருக்கிறார்கள். மாமூல் மனிதர்கள் கிண்டல் செய்யும் போது வேதனைப்படுகிறார்கள். அதே சமயம் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்து வாழ்கிறார்கள். இவர்களின் பிரச்சினை என் மனதில் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது. இந்த அலிகளின் குடும்பத்தாருடன் பேசிப்பார்த்தேன். வரதட்சிணை கொடுமை வறுமை போன்றவைகளால் ஒரு குடும்பம் பாதிக்கப்படுவது போல் அலிகளை உருவாக்கும் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. முதலில் பெண்ணாக ஆசைப்பட்டு, முடிவளர்த்து புடவை கட்டும் ஆணை குடும்பத்தினர் அடித்து உதைத்து திருத்தப் பார்க்கிறார்கள். பிறகு துரத்தி விடுகிறார்கள். இடையில் நடப்பதோ சொல்லொண்னாத் துயரம்.

ஒரு கிராமத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பையன் எப்படி படிப்படியாக அலியாக மாறுகிறான். அதனால் அவன் குடும்பமும் அவனும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே கதையின் கரு.