பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள் ☐

29

உடனடி விருப்பம்

இப்படி அந்த ஏரிக்கரை விடுதியில் நினைத்து பார்த்த சம்பவங்களை எழுதியாக வேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டது. உடனடியாக எழுதத் துவங்கினேன். அப்போது லியோ டால்ஸ்டாயை நான் படித்ததில்லை. ஆனாலும், அவர் சொன்னது போல் பத்துப் பக்கங்களுக்குப் பிறகு, அந்தப் பாத்திரங்களே “என்னை இப்படி எழுது அப்படி எழுது” என்று உத்திரவிட்டன. முக்கால்வாசிப் பகுதியை நான்கு நாட்களில் உத்திரமேரூரில் முடித்துவிட்டு எஞ்சிய பகுதியை வீட்டில் வந்து எழுதினேன். உலகம்மை பட்ட இன்னல்களை விவரிக்கும்போதெல்லாம் என்னை அறியாமலேயே அழுகை வந்தது. கிட்டத்தட்ட ஒரு குழந்தை போலவே அழுதேன் என்று சொல்லலாம். இதே அநுபவம் டால்ஸ்டாய்க்கு பல தடவை ஏற்பட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

நாவலின் நோக்கம்

இந்த நாவலை நான் மீண்டும் திருத்தி எழுதவில்லை. இலக்கணப் பிழைகளை வேண்டுமானால் ஆங்காங்கே திருத்தி இருப்பேன். இந்த நாவலின் நோக்கம் ஒரு சாதிக்குள்ளும் எப்படி இரு வர்க்கங்கள் செயல்படுகின்றன என்பதைக் காட்டுவதாக அமைந்தது. இது நாடார் சாதியை மட்டும் குறை கூறுவது போல் இருக்கக்கூடாது என்பதற்காக பேராசிரியர் பாக்கியமுத்து அவர்களை படித்துக் கருத்துத் தெரிவிக்கும்படி கேட்டேன். அதோடு பல்வேறு நாவல்களை கரைத்துக் குடித்த அவரது கருத்தை அறிந்து கொள்ள