பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

என்றால் அதுதானே இல்லை. 'ஏதோ பழக்கம்' என்று தானே அனைவரும் இப்படிப்பட்ட காரியங்களுக்குப் பதில் கூறுகின்றனர்!

இதே போன்ற மற்றொரு உதாரணத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு வீட்டுத் திண்ணையில் இரண்டு தோழர்கள் உட்கார்ந்துகொண்டு காரசாரமாக அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். கையில்'தினமணி' பத்திரிகை இருக்கிறது. அதில் உள்ள அகில உலகச் செய்திகளை படித்து ரசமான பேச்சு நடக்கிறது.

அந்த இரண்டு தோழர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மற்றவர் பிரஜா சோஷலிஸ்டுக் கட்சியில் பங்கு கொண்டவர். காங்கிரஸ் தோழரைப் பார்த்து, பிரஜா சோஷலிஸ்ட் 'டாக்டர் லோகியாவை காங்கிரஸ் சர்க்கார் கைது செய்தது நியாயமா?' என்று கேட்டார். அதற்குக் காங்கிரஸ்காரர் உடனே 'உங்கள் பட்டம் தாணுப்பிள்ளை மட்டும் திருவாங்கரில் குஞ்சன் நாடாரைக் கைது செய்தது மட்டும் என்ன நியாயம்' என திருப்பிக் கேட்டார். இதைத் தொடர்ந்து ரசமான விவாதம் தொடரும்.

இவர்கள் இப்படி விவாதம் செய்துகொண்டு இருக்கும்போது அந்த வீட்டுக் கூரையில் உள்ள பல்லி ஒன்று ஒரு பூச்சியைப் பிடிப்பதற்காக பாயும். அப்போது அது சிறிது சத்தமிடும். பூச்சியைப் பிடிக்க பல்லியிடம் சத்தம் கேட்டதும், திண்ணையில் உட்கார்ந்து அருமையான அரசியல் விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், தாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் விட்டு. வீட்டு வாயில் சப்புக்கொட்டி தரையில் மூன்றுதரம் விரலால் தட்டுவார்கள்!