பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சூளையிலுள்ள பெரியவர் புரசைவாக்கம் போவதற்குத் தன்னுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போகிறார்.

அவர் புறப்பட்டுத் தெருவில் சிறிது தூரம் செல்லும் போது அடுத்த வீட்டிலுள்ள பூனை எதிர்த்தவீட்டுத் திண்ணைப்பக்கமாக ஒரு எலியைப் பிடிக்க குறுக்கே ஓடுகிறது. இதைக் கண்டவுடனே, பஞ்சாயத்துக்காக வேகமாக நடந்து சென்ற பெரியவர் திடுக்கிட்டுத் திரும்பி வந்து தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்.

திரும்பி வந்தவர் திண்ணையில் உட்கார்ந்தபடியே அடியே காமாட்சி!" என்று தமது மனைவியை அழைப்பார். இப்படி அவர் அழைத்த உடனே அந்த அம்மையார் சகுனம் சரியில்லை போலிருக்கிறது' அதுதான் திரும்பி வந்துவிட்டார்' என்றுதீர்மானித்து கையில் தண்ணீருடன் திண்ணைப் பக்கம் வருவார். பெரியவர் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டுச் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகே தான் மீண்டும் எழுந்து புரசைவாக்கம் போவார்.

இந்தப் பெரியவர் போவதே புரசைவாக்கம் சச்சரவைத் தீர்ப்பதற்காக. குறுக்கே பூனை ஓடியதோ எதிர்த்த வீட்டுப் பக்கம் ஓடிய எலியைத் துரத்திப் பிடிப்பதற்காக! குறுக்கே ஓடிய பூனையைக் கண்டு இவர் திடுக்கிடுவானேன்? திரும்பி வருவானேன்? திண்ணையில் உட்கார்ந்து தண்ணீர் சாப்பிடுவதும்தான் எதற்காக?

இவர் போகின்ற காரியத்திற்கும் பூனை குறுக்கே ஓடி யதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே? என்றாலும் பூனை குறுக்கே ஓடினால் அவர் மேலே போகமாட்டார் சகுனத் தடையாகி விட்டது. போகிற காரியம் தடையாகிவிடும் என்று அஞ்சுகிறார்.

'ஏன் இப்படி'? என்று அந்த பெரியவரைக் கேட்டால் பொருத்தமான காரணம் ஏதாவது கூறமுடிகிறகிதா