பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

தான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தையும் பல்லையும் காதலியிடம் காட்டி "பெண்ணே"! இதோ பார். நானே வேட்டையாடிய புலியின் நகம்! இதுதான் அதனுடைய பல்! என் வீரத்தைக் கண்டாயா? இவைகளை என் வெற்றிச் சின்னமாக உனக்குத் தருகிறேன். இவைகளைக் கயிற்றில் கோர்த்து கழுத்தில் தாலியாகக் கட்டுகிறேன், என்று கூறினால் எத்தனை பெண்கள் 'சரி' என்று ஏற்பர்! ஏற்கும் சூழ்நிலை இன்று இருக்கிறதா இல்லையே!

புலியைக் கொன்றேன், இதோ அதன் பல்! அதன் அளவைப் பார்! நகத்தின் கூர்மையைக் கண்டாயா! என்று கேட்கும் காதலனின் வீரத்தையா இந்தக் காலத்துப் பெண் எண்ணிப் பெருமைப் படமுடியும்?

காதலனிடம் சிக்கிய காட்டுப் புலிக்கே இந்தக் கதி ஏற்பட்டு விட்டதே! இப்படிப்பட்டவனிடம் நாம் சிக்கி விட்டால் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று தானே அஞ்சி நடுங்குவாள்.

இந்தக் காலத்துப் பெண்கள் தன் கணவன்மாரிடம் புலிவேட்டையாடும் அளவுக்கு உள்ள வீரத்தை எதிர் பார்க்கவில்லை. எந்தக் கணவனும் புலி என்றவுடனே கிலி கொண்டிடும் நிலையில் தானே இருக்கிறார்கள். பெண்கள் இன்று தங்கள் கணவன்மார்களின் மட்டற்ற வீரத்தை மட்டுமே பெரிதாகக் கருதவில்லை.

அவர்கள் தங்களுக்கு வரப்போரும் கணவன் அழகாக இருக்கவேண்டும். அதோடு அன்புடையவனாக நடந்து கொள்ளவேண்டும் நல்ல குணவானாக பண்புள்ளம் படைத்தவனாக இருக்கவேண்டும், வெளியில் செல்லும் போது தங்களையும் அழைத்துச் செல்லவேண்டும். நல்ல நாகரீகமுடையவனாக விளங்கவேண்டும். குடும்பத்தில் அக்கரையுள்ளவனாகத் திகழவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.