பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

எதிர்ப்பவர்களைத் தாக்கித் தகர்த்திடும் கட்டான உடலும், உள்ள உரமும், உருட்டு விழியும் உள்ளவனாக ஊரார் கண்டு நடுங்கிடும் மனிதனாகத் தங்கள் கணவன்மார் இருக்க வேண்டும் என்பதைப் பெண்கள் விரும்பிய காலம் போய் விட்டது.

எனவே தாலி கட்டுவதிலும் நாம் செய்யும் காரியம் அர்த்தமுள்ளதா? அறிவுக்குப் பொருத்தமுள்ளதுதானா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டுகின்றேன்.

அய்யரை அழைத்து மந்திரம் ஓதாமல், அம்மிமிதித்து அருந்ததி காட்டுவது போன்ற சடங்குகளைச் செய்யாமல் நடைபெற்று வரும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று மக்களிடையே ஒரு பயம் முன்பெல்லாம் நிலவி வந்தது. சந்தேகம் உதித்து வந்தது.

நான் கேட்கிறேன், யாருக்குச் சட்டத்தின் பாதுகாப்புத் தேவையென்று? நாமெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் தானே! நமக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு நமது சொத்து பற்றிய உரிமை ஏற்பட வேண்டும் என்பதற்குத் தானே சட்டம் தேவைப்படுகிறது.

ஏராளமான பணத்தைத் தேடிவைத்துள்ள பணக்காரர்கள் தானே இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்!

மக்களுக்கு இனி இத்தகைய அச்சமும் ஆயாசமும், பரிதவிப்பும், பயமும் ஏற்படுவதற்குக்கூட காரணமில்லாமற் போய் விட்டது. ஏராளமான சீர்திருத்த திருமணங்கள் நாட்டில் நடைபெற்று வருகின்ற காரணத்தால், இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களும் இனி சட்டப் படி செல்லுபடியாகும் என்றசூழ்நிலை இப்போது உருவாகி வருகிறது.

ஆச்சாரியார் மந்திரி சபையில் சட்ட மந்திரியாக இருந்த குட்டி கிருஷ்ணன் நாயர் காலத்தில் சீர்திருத்தத்