பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

நாம் இப்படிக் கூறியபோதும் பெரும்பாலேர் எதிர்த்தனர். ஏளனம் செய்து தூற்றவும் செய்தனர். பெண்ணுக்குச் சொத்துரிமையா? பெண்ணிடம் பணம் இருந்தால் ஆணை அவள் எப்படி மதிப்பாள் என்று கூக்குரலிட்ட னர். நாம் எதற்கும் அஞ்சாது இதனை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்துவந்தோம்.

அதன் பலன் இன்று பெண்களுக்குச் சொத்துரிமை தரும் மசோதா விரைவில் டெல்லிப் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாம் எக்காரணத்திற்காகப் போராடி வந்தோமோ அவைகள் எல்லாம் இன்று சட்டமாகி வருகின்றன என்பதைக் காணும்போது நாம் செய்து வரும் பணி எவ்வளவு மகத்தானது என்பது மட்டுமல்ல, நாட்டுக்குத் தேவையான நல்ல பணியைச் செய்து வந்தோம் என்பதும் தெரிகிறது.

இந்த நிலையைக் கண்டு நாம் பெரிதும் மகிழ்கிறோம். பெருமைப்படுகிறோம்.

இந்த முறையில்தான், நாம் சீர்திருத்தத் திருமணங்கள் செய்து வருவதிலும் வெற்றி கண்டோம்! மேலும் மகத்தான வெற்றிகளைக் காண்போம் என்பதும் உறுதி.

சீர்திருத்த முறையில் திருமணங்களை நடத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூறும் காரணங்களை ஒருவராலும் மறுக்க முடியாமற் போனாலும் சிலர் அந்தக்காலம் முதல் இருந்து வரும் 'பழக்கங்களையா தள்ளி விடுவது' என்று கேட்கிறார்கள்.

அந்தக்காலம், அந்தக்காலம்! என்று பேசி வரும் தோழர்களையும், பெரியவர்களையும் நான் கேட்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அந்தக்காலம் எது? சொல்லுங்கள். நிர்ணயமாக அந்தக்காலம் எந்தக்காலம் என்பதை!