பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

நாளெல்லாம் ஆளாகி அவதியுறும் மனைவி அவனிடமிருந்து விடுதலைபெற வழிபிறக்கும்.

மனைவியைக் கவனியாது பிற பெண்கள்மீது நாட்டம் செலுத்தும் கணவனிடமிருந்து விடுதலைபெற மனைவி கோர்ட்டில் வழக்குத் தொடரமுடியும். என் கணவன் வீட்டுக்கு இரவில் வெகு நேரம்கழித்தே வருகிறார். வந்தாலும் என்னிடம் பேசுவதில்லை. சம்பாதிக்கும் பணத்தையும் செலவுக்குக்கூட தருவதில்லை. தூக்கத்தில் காந்தா சாந்தா என்றும் கனவுகண்டு வாய் பிதற்றுகிறார். இவருக்கு என்மீது பிரியமில்லை, வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஆகவேதான் இவரிடமிருந்து விவாகரத்து கோருகிறேன் என்று மனைவி கோர்ட்டில் கூறமுடியும்.

கோர்ட்டாரும் இதைத் தீரவிசாரித்து கேள்விகளுக்கு மேல் கேள்விகளை போட்டு, ஒழுங்கான வாழ்க்கை நடத்த கணவன் இலாயக்குள்ளவன்தானா என்பதை ஆராய்ந்து பார்த்து அவசியமாயின் அந்த மனைவிக்கு விவாகரத்து உரிமையைத் தருவர். இதைப்போலவே குடும்பத்திற்குச் சிறிதும் பொருத்தமற்ற மனைவியையும் ஒழுங்கீனமான பெண்ணையும் விலக்க ஆண்களும் உரிமைகோரலாம். ஒத்த கருத்தின்மை ஏற்படும்போது விலகிவாழ் உரிமை பெறுவது இருவருக்கும் நல்லதுதான். இதனால் சமூகத்திற்கும் நன்மை உண்டு.

லிவாகரத்து உரிமைக்கான சட்டம் வருவதைப் போலவே நாம் நெடுநாட்களாகத் தேவையென்று பாடு பட்டுவரும் மற்றொரு பிரச்சினைக்காகவும் சட்டமியற்றப் படுகிறது டில்லியில்.

நாம் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறோம் பெண்களுக்கும் ஆண்களைப் போலவே தகப்பன் சொத்துக்களில் உரிமை இருக்கவேண்டும் என்று.