பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நடந்த நிர்வாண ஊர்வலம் எதைக் காட்டுகிறது? அறிவுத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தையா? அல்லது இன்னமும் இந்த நாட்டில் காட்டுமிராண்டித்தனம் மக்களிடம் இருக்கிறது என்பதைத்தானே காட்டும்! இத்தகைய காட்சியைக் காணும் எந்த வெளி நாட்டானும் நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணுவான்.

இதைப்போல நான் அடிக்கடி குறிப்பிட்டு வரும் கோவைக்கு அருகிலுள்ள காரமடை என்ற ஊரில் நடக்கும் அர்த்தமற்ற ஆபாசத் திருவிழாவும் இருக்கிறது! அங்கே அனுமார் ஆவேசமாடும் ஒரு சாமியார் வாயிலிட்டு மென்று கீழே துப்பும் எச்சில் வாழைப்பழத்தைப் புசிப்பதால் பிள்ளைப்பேறு கிடைக்குமென்று நம்பி, எத்தனையோ பெண்கள் எடுத்துப் புசித்து வருகிறார்களே! இதெல்லாம் சரியா ? இந்தகாலத்திற்கும் தேவைதானா? அண்மையில் எங்கோ ஒரு இடத்தில் பாரதப் பிரசங்கம் நடந்ததாம். அதன் கடைசி நாளன்று பீமன் வேஷம் போடுபவன் துரியோதனனைக் கொல்வதற்காகும் படுகளம் நடந்தது. அன்று 6 அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் மண்ணினால் செய்யப்பட்டிருந்தது. இதனை பீம வேடதாரி வெட்டி வீழ்த்தினான். இதனைச் சுதேசமித்திரன் பத்திரிகை படம் பிடித்து பெரிதாகப் போட்டுக் காட்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட படத்தை பார்க்கும் வெளிநாட்டான் என்ன நினைப்பான்? இன்னமும் இந்த நாட்டில் மண் பொம்மை வெட்டுவதில்தான் வீரம் காணப்படுகின்றது என்று தானே கருதுவான்.

இப்படிப்பட்ட கேவலமான பழக்கங்களையும், அர்த்தமற்ற திருவிழாக்களையும் பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால் நாம் உண்மையிலேயே முன்னேற முடியும். ஆகவேதான் சீர்திருத்த திருமணங்கள் நடப்பதின் மூலம் அறிவுப் பணி நன்கு வேரூன்றி நிலைத்துப்பரவ வழியிருக்கிறதென்று குறிப்பிடுகிறோம்.