பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கி விட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக்கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே. ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்துகொள்ளும் இந்த மணமக்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன்; மனதார வாழ்த்துகிறேன்.

இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக்கூடாதா என்றும் சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். இப்படிப் பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத்தான் மாட்டோம். பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்து விடுசிறேன்.

அந்தக்காலத்தில் ஊசி முனையில் நின்றும், ஒற்றைக்காலில் நின்றும், பற்பல விதமாக அகோர தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற் ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி, கடவுளிடம் எதைக்கோரினார்கள்?

மக்கள் வாழ வேண்டும்; உலகம் உருப்பட வேண்டும்; வறுமை ஒழியவேண்டும்; உலகத்தில் உண்மை தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது, எந்த பக்தனாவது நாயான்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காக கடவுளை வரம் கேட்ட பக்தர்கள் யாரையாவது காட்ட முடியுமா?. ஒருவரும் கிடைக்கமாட்டார்கள். எல்லோரும் தங்கள் சுயநலத்தைத் தானே பெரிதாகக் கருதியிருக்கிறார்கள். 'எனக்கு இந்திரப் பதவியைக் கொடு' என்றொரு முனிவர் கேட்பார். எனக்குக் காமதேனு வேண்டும். கற்பக விருட்சம் தேவை என்று மற்றொரு தவசி கேட்டிருக்கிறார். மேன்கை, ரம்பை, திலோத்தமை, ஊர்வசி போன்ற தேவலோகத்து நடன மாதர்களின் சுகத்தையனுபவிக்க சொர்க்கவாசம் தேவையென்று ஒரு நாயன்மார் கேட்பார்.