பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

விடும் தெரியுமோ? நீ குறுகி, கூனி குவலய மறியாத் தவளையாகி விடுவாய்."

"இல்லையே! தமிழில் எழுதும்போது, இன்பம் காண்கிறேன். தமிழ்க் கவிதை, உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. தமிழ் இசை, நெஞ்சை அள்ளுகிறது. தமிழில் இருக்கும் இனிமையை உண்ண நான் அவாவுறுவது குற்றமாயின், நான் குற்றவாளிதான். ஆனால், உமது நோக்கம் என்ன? நீர் தமிழனா? ஆமெனில், உமக்கேன் இந்தத் தமிழ்ப்பற்று உண்டாகவில்லை? தமிழைக் கண்டதும் ஏன் பதைக்கிறீர்? அது எழுத்தாக வந்தால் எதிர்க்கிறீர். இசையில் வந்தால் சீறுகிறீர். நீர் ஆரியராதலால் எதிலும் ஆரியம் இருக்கப் பாடுபடுகிறீர். ஆரியத்தை ஒழிக்க, தமிழர் எந்தத் துறையிலே பாடுபட முன் வந்தாலும் எதிர்க்கிறீர்.இனி உமது எதிர்ப்பைக் கண்டு, தமிழன் தன் காரியத்தைக் கவனியாவது இருக்கப் போவதில்லை. தமிழா உன் தோள் வலிமை, தரணியெலாம் அறியாதோ! என்றதோர் இசை கேட்டேன். தடுக்க முடியாத பேராவல் கொண்டேன், தமிழே விழைவேன். அதை வளர்க்கவே முயலுவேன்.!"

இது ஊரார் பல்வேறு இடங்களில், உரையாடுவதன் சுருக்கம். தமிழர் என்ற சொல் கிளப்பிவிட்ட எழுச்சி. எங்கெங்கு ஆரியம் தங்கித் தொல்லை தருகின்றதோ, அங்கெல்லாம், அதனை அறுத்தொழிக்கக் கிளம்பி விட்டது. அது கண்டு ஆரியர், தமது ஆதிக்கம் அழிவுபடுவதைத் தடுக்க, இன்று அண்டமுட்டக் கூக்குர லிட்டுப் பார்க்கின்றனர். நிலவொளியைக் கண்டு குக்கல் குலைக்குமாம்!

தமிழ் நாட்டிலே, தமிழ்ப்பாடல் கிடையாது. பாட வேண்டுமானால், தமிழ்ப் பாடகர்கள் கூச்சப்படுகின்றனர். தியாகய்யரின் கீர்த்தனங்களென்ன, சாமா சாஸ்திரிகள் சுருதிகளென்ன, மற்றுமுள்ள தெலுங்குக் கீர்த்தனங்களைப் பாடினால் சங்கீத விற்பன்னர்கள் என்று பெயர் கிடைக்கும். தமிழில் என்ன பாடுவது! மள மளவென்று