பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஆறு தியாகய்யர் கிருதிகள் பாடிவிட்டு 'சுரம்' இரண்டு கிருதிகளுக்குப் போட்டுவிட்டு, ராகமாலிகையை ரசமாகப் பாடிவிட்டு ஜ்வாளிக்குப்போய், கடைசியில் இரண்டு தமிழ்த் துக்கடாவைக் கிடுகிடுவெனப் பாடிவிட்டு. "நீநாம ரூபகு" என்று மங்களம் பாடி விடுவதைச் சங்கீத வித்வான்கள் சம்பிரதாய மாக்கிவிட்டனர். பெரிய வித்வான் என்பதற்கு இலட்சணமே இது தான் என்று கருதிவிட்டனர். இதனை எதிர்த்து யாராவது தமிழ்ப் பாட்டுப் பாடக்கூடாதா என்றால், நாடக மேடைபோல் ஆகிவிடுமே என்று நையாண்டி செய்வர். இது தமிழ் நாட்டில் பல காலமாக இருந்து வரும் வாடிக்கை.

இசை, இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப்படுகிறதோ, அதை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடியதான மொழியில் இருத்தல் வேண்டும். இது அறிவுத் துறையில் அரிச்சுவடி! இதனை 'ஆரிய மேதாவிகள்' மறுக்கின்றனர்! என்ன அறிவீனம்!

நீக்ரோவின் நடனத்தைக் காண்கிறோம். கண்டுவிட்டு நகைக்கிறோம். ஆனால் நீக்ரோவுக்கு நெஞ்சு இழைகிறது நீக்ரோ நடனத்தைக் கண்டு! ஏன்? அதனைப் புரிந்து கொள்கிறான்.

நேற்று, சித்தூர் பாடினார் அருமையாகப் புஷ்பராகத்தை ஜொலிக்கச் செய்து என்று கூறினால், புஷ்பராகம் என்று ஒரு ராகம் இருப்பதாக எண்ணிக்கொள்ள எத்தனையோ பேர்கள் உண்டு. அது அவர்கள் குற்றமல்ல; வராகம் என்று இன்னொரு ராகம் இருப்பதாக நம்பினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ராக விஷயங்கள், மக்களில் நூற்றுக்கு எத்தனைப் பேருக்குத் தெரிய முடியும்? கருப்பையா என்பதற்குச் சுப்பையா என்று கையொப்பமிடும் பேர்வழிகள் நிரம்பியுள்ள நாட்டிலே நாம் இருக்கிறோம்.