பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

வாதாடுகின்றனர். தமிழன் மறுமலர்ச்சி கண்டு ஆத்திரமடைந்து. ஆர்ப்பரிக்கின்றனர். 'இந்து' பத்திரிகை, இசையில் தமிழ் புகுந்தது கண்டு, குட்டித் தலையங்க மெழுதி குறும்புத்தனமாகக் கண்டிக்கத் துணிந்து விட்டது.

ஆரியரின் இந்த எதிர்ப்புக் கண்டு தமிழர் அஞ்சத் தேவையில்லை. தமிழ் நாட்டிலே தமிழே இருத்தல் வேண்டும். தமிழருக்குத் தமிழ் இசையே தேவை. அதுவே அவர்களுக்கு இன்பத்தைத் தரும். பார்ப்பனரின் பிழைப்புப் பாதிக்கப்படும், என்று பதைத்துப் பயன் இல்லை. ஆரியத்தை இலக்கியம், எண்ணம், இசை முதலிய எல்லாச் துறைகளிலுமிருந்து விரட்டி ஒழித்தால்தான் தமிழர் தமிழராக வாழ முடியும். ஆகவே, தமிழர்கள் இந்த ஆரிய எதிர்ப்பைக் கண்டு தளராமல் தனித் தமிழ், தமிழ் இசை ஆகியவற்றிற்கு உழைத்துத், தமிழ் நாடு தனி நாடாவதையும் கண்டு களித்து வாழும் வரை, உழைக்க முன்வர வேண்டும்.

      *                    *                     *

தமிழ் வளர்ச்சி, தமிழர் முன்னேற்றம் என்ற சொற்களைக் கேட்டால் போதும். உடனே ஒரு கூட்டத்தார் மற்ற மொழிகளுக்குக் கேடு; மற்ற வகுப்பினருக்குத், தீங்கு என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள்; அதனால் உடனே இவைகளுக்கு எதிர்ப்பு வேலை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். இவர்களுடைய விபரீத உணர்ச்சி காரணமாகவே, மொழிச் சண்டை, வகுப்புச் சண்டை நமது நாட்டில் வலுத்து வருகின்றன. உண்மையிலேயே இத்தகைய நிலை ஏற்படுவதற்கு நாம் வருந்துகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பல மகாநாடுகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற இசைவாணர்கள். இசைக்கலை அன்பர்கள் தமிழன்பர்கள் அனைவரும் அங்குக் கூடினர். நான்கு நாட்கள் தமிழிசைக் 'கச்சேரிகள்' நடத்தினர்.