பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

தமிழிசையைப் பற்றிப் பலர் பேசினர். அம் மகாநாட்டில் ஒரு சிறந்த முடிவும் செய்யப்பட்டது.

"சங்கீதப் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பாட்டுக்களையே சொல்லிக் கொடுக்க வேண்டும். சபைகளில் தமிழ்ப் பாட்டுக்களையே பாட வேண்டும்" என்று அம் மகாநாட்டினர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைத்தனர்.

இத் தீர்மானத்தை எல்லா இசைக் கலைவாணர்களும் ஒப்புக்கொண்டனர். நமது நாட்டுப் பத்திரிகைகள் பலவும் இதைத் தமிழ் வளர்ச்சிக்கு வந்திருக்கும் நல்ல காலத்தைப் பற்றி நாவாரப் புகழ்ந்தன. தமிழ்க்கலை வளர்ச்சியிற் கருத்துடையவர்கள் அனைவரும் உள்ளங் குளிர்ந்தனர். இத்தகைய மகாநாட்டுக்குக் காரணராக இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவனர், செட்டிநாட்டு அரசர், சர் அண்ணாமலைச் செட்டியாரவர்களைப் பாராட்டினர். அவருடைய அரும் பெரும் முயற்சிக்கு வாழ்த்துக் கூறினர்.

தமிழில் இசைப்பாடல்கள் இயற்றுவதற்குப் பரிசளிப்பதற்காகவும், அவற்றைப் பாடுவோரைப் பாராட்டுவதற்காகவும், செட்டிநாட்டு அரசர் அவர்கள், பெருந்தொகையை நன்கொடையாக அளித்துள்ளார். இச்சிறந்த வேலையைத் தனது செல்வப் பிள்ளையாகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூலமே செய்வதற்கு முன் வந்தார்.

தமிழ் மொழியே, இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் என்று முப்பிரிவை யுடையது. இவற்றுள் இசை யென்பது, இயற்றமிழிலும் உண்டு; நாடகத் தமிழிலும் உண்டு; தமிழே இசை யுருவாக அமைந்தது. இசையே தமிழில்தான் முதன் முதலில் தோன்றிய தென்பது பல தமிழாராய்ச்சியாளர்களின்முடிபு. தமிழாராய்ச்சியுடைய இசை வாணர்களுடைய முடிபும் இதுதான். இத்தகைய இசைத் தமிழ் இடைக்காலத்தில் குன்றிவிட்டது. இசைவாணர்கள்