பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

நீதிபதி அவர்கள் இரண்டு பிரச்னைகளை எழுப்பியுள்ளார்கள். வாழ்வு என்றால் என்ன, இலக்கியம் என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார்கள்.

வாழ்க்கை இல்லையென்றால் இலக்கியமில்லை. இலக்கியமில்லை யென்றால் வாழ்க்கை இல்லை இலக்கியமும், வாழ்க்கையும் ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டும்.

இப்போது வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் எந்த வகை தொடர்பு இருக்கிறது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் எப்படிப்பட்ட தொடர்பு இருக்க வேண்டும். இப்போது எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இலக்கியம் வளர்ச்சி பெற வேண்டுமென்று பேசுகிறவர்கள் எப்படி வளர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்று சிந்திப்பதில்லை!

நீங்களும் நானும் இலக்கியப் பேராசிரியர்கள் அல்ல. விழா முடிந்த பிறகு ஏற்படுகின்ற ஐயப்பாடுகளை எப்படி தீர்த்துக் கொள்வது?

அனைவரும் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளுவதிலேயும், எப்படி வாழுவது என்பதை அறிய அக்கறை கொண்டிருக்கிறோமே தவிர இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன என்று அறிந்துகொள்வதிலே அக்கறை செலுத்துவதில்லை—எண்ணிப் பார்ப்பதுமில்லை. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

தலைவரவர்கள் புரட்சி என்றால் என்ன என்றும் கேட்டார்கள்.

எதிர்பாராத விதத்திலே வருவது புரட்சி, எண்ணிப் பார்த்து வரும் வரும் என்று காத்திருந்து பெறுவது மறு மலர்ச்சி.