பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ரைத்தால் சீறுங்கள். தமிழ் மொழியில் இசை இருக்கட்டும் என்றால், எதிர்த்துப் பேசுங்கள். கலைச் சொற்களுக்கு வடமொழியே இருக்கவேண்டும் என்று வாதாடுங்கள். தமிழனைத், தாழ்ந்த ஜாதி என்று சொல்லுங்கள். கூட இருக்ககூடாது என்று கட்டளையிடுங்கள். கோயிலிலும் குளத்திலும் இழிவு படுத்துங்கள். சாப்பாட்டு விடுதிகளிலும், சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள். உமது ஆணவச் செயலை, திமிர் வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம். ஆம்! உமது எதிர்ப்பு வளர வளரத்தான், தமிழனின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால், அவன் வேல்பட்ட புலி போலச் சீறுவான். அந்தச் சீற்றம் கிளம்பிவிட்டால், நாங்கள் 'ஜெயமுண்டு பயமில்லை மனமே' என்று பாடும் காலம் பிறக்கும்! 'தமிழ் நாடு தமிழருக்கே' என்ற எண்ணம் உருவமாக அமையும் காலம் தோன்றும். சேரனும், சோழனும், பாண்டியனும் இறந்துபடினும், அவர்கள் காத்தாண்ட செந்தமிழ் நாட்டில், தமிழராட்சி தோன்றும். ஆகவே, ஆரியர்களே ஆரம்பியுங்கள் உங்கள் போரை!" என்று நாம் ஆரியரை அறைகூவி அழைக்கின்றோம்.

ஆனால் தமிழ் இசைபற்றிப் பேசும்போது, சொத்தைக் காரணங்களை ஆரியர்கள் கூறுகின்றனர். அது நமக்குப் பிடிக்கவில்லை. அறிவு படைத்த யாருக்கும் பிடிக்காது. தமிழ் இசை என்று ஆரம்பிக்கும் தமிழன், வேறு எங்குமே தமிழ் ஆட்சிதான் தேவை என்றல்லவா கூறத் தொடங்குவான். அது நமக்கன்றோ ஆபத்தாக முடியும். ஆகவே, முளையிலேயே கிள்ளுவோம். தமிழ் உணர்ச்சி தலைதூக்க ஒட்டாது அடிப்போம் என்பதே ஆரியரின் நோக்கம். தமிழகத்தின் தமிழ் உணர்ச்சி, தமிழர் என்ற உணர்ச்சியையும் வளர்த்துவிடும் என்ற அச்சம் ஆரியரைப் பிடித்துக்கொண்டது. அதனை வெளிப்படையாகப் பேச வெட்கி, "இசையிலே மொழிப்போர் என்ன? தியாகய்யர் என்னாவது? சியாமா சாஸ்திரிகள், தீட்சிதர் கிருதிகள் என்னாவது?" என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.