பக்கம்:எனது நண்பர்கள்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  121
 

பொழுது விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்குங்கள்” எனக் குறித்துக் கூறினார்.இது அனைவராலும் கைதட்டி வரவேற்கப்பட்டது.

நாங்கள அல்ல

1944—ல் ஈரோட்டில் இரண்டாவது நாடகக் கலை மகாநாடு சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெரியாரைப் பின்பற்றுவோர்க்கும், சர். ஷண்முகத்தைப் பின்பற்றுவோர்க்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வந்ததினால், மாநாட்டில் கலவரம் ஏற்படும் என்ற வதந்தி உலவியது. பேசுவதற்காக என்று: நாங்கள் சென்றிருந்தோம் அன்பர் அண்ணாத்துரை பேசும் பொழுது,

“தலைவர் தங்கள் மீது வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். கம்ப இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுவதெல்லாம், அந்த நூலின் மீது எங்களுக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்கே ஒழிய, உள்ளபடியே கம்ப இராமாயணத்திற்குத் தீ வைக்கும் கயவர்கள் நாங்கள் அல்ல.”

என ஒரு விளக்கப் போடு போட்டார். தலைவர் சர். ஷண்முகம் அவர்கள் சிரித்தார். “என்ன என்றேன்?” “சரிதான்” என்றார்.

சொற்போர்

திருவாளர் ஆர்.பி.சேதுப்பிள்ளை அவர்களுடன் ஒரு முறையும், பேராசிரியர் ச.சோ. பாரதியார் அவர்களுடன் ஒரு முறையும் கம்ப இராமாயணம் பற்றிச் சொற்போர் நிகழ்த்த, சென்னையிலும் சேலத்திலும் சில அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டிலும் அன்பர் அண்ணாத்துரையே வெற்றி பெற்றாரா? மற்ற இருவரும் வெற்றி பெற்றார்களா? என்ற கேள்வி இங்கு வேண்டியதில்லை. அவர்கள் இருவரும் சொற்போர் நிகழ்த்த, ஒப்பியதே அண்ணாத்துரைக்கு ஒரு வெற்றியாக அமைந்து விட்டது.