பக்கம்:எனது நண்பர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  19

குளிக்கச் சென்றார். பரமசிவம் வந்தார். அவரை உள்ளே போகவேண்டாமென்று பிள்ளையார் தடுத்தார். அவர் மீறி அவர் தலையைக் கொய்துவிட்டு உள்ளே சென்றார். பார்வதி தேவி ‘நான் குளிக்கும் செய்தியைப் பிள்ளையார் சொல்லவில்லையா?” என்று பரமசிவத்திடம் கேட்டார். பரமசிவம் நடந்ததைச் சொல்லி நம்முடைய பிள்ளையா அது? என்று கேட்டார். பார்வதி கலங்கி அழுதார். பரமசிவம் வெளியே சென்று ஓர் இறந்துகிடந்த யானையின் தலையைக் கொண்டு வந்து பிள்ளையார் உடம்போடு இணைத்து உயிர்ப்பித்தார்’ என்று பிள்ளையார் பிறந்த வரலாறு சிவபுராணத்தில் ஒரு வகையாகவும், கந்தபுராணத்தில் ஒரு வகையாகவும், விநாயகர் புராணத்தில் ஒரு வகையாகவும் கூறப்பெற்றிருக்கிறது. இதுபற்றி நான் ஆராயத் தொடங்கினேன். பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையார் பிடித்து வைத்த கதையை என்னால் நம்ப முடியவில்லை.”

“பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும் அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்க வேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?” என வினாக்களை அடுக்கிக் கொண்டே வந்து, “என் தாய் அழுக்கற்றவள். என் தாய் அழுக்கற்றவள்” என இருமுறை கூறினார். அப்பொழுதுதான் எனக்குத் துண்டறிக்கையில் வந்த கேள்விக்குப் பொருள் விளங்கிற்று.

இதிலிருந்து அடிகளார் சைவ சமயத்திலும் ஒரு சீர்திருத்தக் கொள்கை உடையவர் என்பதையும். தன் உள்ளத்திற் பட்டதை ஒளிக்காது கூறுகிறவர் என்பதையும் நன்கறியலாம்.

45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது கடவுள் நம்பிக்கை வரவரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/20&oldid=986055" இலிருந்து மீள்விக்கப்பட்டது