பக்கம்:எனது நண்பர்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  33
 
அவருடைய தமிழ்ப் பற்றுத் தமிழ்நாட்டிலே நன்கு மதிக்கப் பெற்றிருக்கிறது. அதுதான் “திருக்குறள் வ. உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு’’ என்பதாகும். இது இன்னும் நம்மிடையே இருந்து கொண்டு அவர்களையும் அவர்களது தமிழ்ப்பற்றையும் நினைப்பூட்டி வருகிறது.

திரு. பிள்ளை சிறையிலிருப்பார். வீட்டிலிருந்து செய்தி வரும். வருகின்ற செய்தி “குழந்தைக்குத் துணியில்லை; உணவுக்கு வழியில்லை” என்றிருக்கும். கண்கள் கலங்கும்; மனம் கலங்காது. இத்தகைய செய்திகள் பலவற்றை அரசாங்க அதிகாரிகள் அவரிடம் அனுப்பி வைப்பார்கள். காரணம் எந்த வகையிலானும் மன்னிப்பைப் பெற்று, விடுதலை பெற்று அவர் வெளியேற வேண்டும் என்பதுதான். இருமுறை ஆயுட்காலத் தண்டனை; அந்தமான் தீவுக்கு நாடு கடத்தும் தண்டனைகளைப் பெற்று, செக்கிழுத்து வாடி வதங்கி அடைத்துப்போன காதுகளுக்கு, இச்செய்திகள் எட்டும். மடிவதில் மனம் கொண்டாரேயன்றி மன்னிப்பில் மனம் கொள்ளவில்லை.

ஒரு நாட்டுத் தலைவன் மனைவியையும் மக்களையும் காப்பாற்றத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமையினால், அவர்கள் முன்வந்து உதவி செய்யவில்லை. அவர் வாழ வகையின்றி வருந்தினார். இப்படிப்பட்ட மக்களுக்காகச் சிறை புகுந்து, செக்கிழுத்து மடிவதும், தன்னை நம்பியுள்ள மனைவி மக்களை இப்படிப்பட்டவர்களிடம் உயிரோடு ஒப்புவித்து, அவர்களையும் மடியச் செய்வதும் நியாயமாகுமா?’ என்று சிறையில் பல ஆண்டுகள் எண்ணி எண்ணி வருந்தி நொந்தார். கடைசியாக ஒரு நாள் நீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்தது. மீண்டும் வழக்கறிஞர் தொழிலை நடத்தினார்கள். திரு. பிள்ளை அவர்களோடு சேர்ந்து நான்கு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் பேசும் சில

எ. ந.—3