பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


வேட்டி, மேலே சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்தார். நான் அரசரை வேறுவிதமாக உருவகப் படுத்தி வைத்திருந்தேன். வெல்வெட் சரிகையில் கால்சட்டை, மேலங்கி யெல்லாம் அணிந்திருப்பார்; பீதாம்பரம் மேலே போட்டிருப்பார், என்றெல்லாம் எண்ணியிருந்தேன். அரசர் சாதாரணமாகவும், எளிமையாகவும் இருக்கவே எங்களுக்குத் தைரியம் ஏற்பட்டது. நாங்கள் எல்லோரும் கைகூப்பி வணங்கி நின்றோம். அவர் எங்களிடம் நாடகங்களைப்பற்றிப் பேசத் தொடங்கினார், ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தார். திடீரென்று ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, “நீங்களெல்லாம் குடிகாரர்களாகிக் கெட்டுப் போகக் கூடாது. எம். ஆர். கோவிந்தசாமி, குடியினால்தான் அழிந்தான். இன்னும் எத்தனையோ கலைஞர்கள் குடிப் பழக்கத்தால் நாசமாகியிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் தந்தையார் கூடத் தம் புதல்வர்களுக்கு மருந்து என்று சொல்லி மது வகைகளைக் கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுத்தாலும் நீங்கள் குடிக்கக் கூடாது. பிறகு அதுவே பழக்கமாகி விடும்” என்றார்.

அரசர் இவ்வாறு கூறியதும் நானும், சின்னண்ணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சென்னையில் எங்கள் தந்தையார் மலேரியா ஜுரத்திற்குப் பிராந்தியை மருந்தாகத் தந்தது நினைவிற்கு வந்தது.

கல்யாணராமையர்

அரசரின் எதிரே ஆள் உயரத்தில் ஒரு படம் சுவரில் மாட்டப் பெற்றிருந்தது. வேட்டியை மூலக் கச்சமாகக் கட்டி, நீண்ட கோட்டு, தலைப்பாகையெல்லாம் அணிந்து, அந்தப் படத்தில் காணப்பட்ட உருவத்தை நாங்கள் யாரோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என எண்ணினோம். அரசர் அந்தப் படத்தை எங்களுக்குச் சுட்டிக் காட்டி,

“இதோ, இந்தப் படத்திலிருப்பவர்தான் பிரபல நடிகர் கல்யாணராமையர். பெண்ணாக நடிப்பதற்கு அவரைப்போல் இனியொருவர் பிறக்க வேண்டும். பாமா விஜயத்தில் அவர் சத்தியபாமாவாக நடித்தது இன்னும் என்கண்முன்னே நிற்கிறது.