பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குமார எட்டப்ப மகாராஜா

மதுரையில் நடைபெற்ற நாடகங்களை எட்டையபுரம் அரண்மனை அதிகாரிகள் சிலர் வந்து பார்த்தார்கள். அவர்கள் மூலம் நாடகங்களின் சிறப்பை அறிந்த எட்டையபுரம் அரசர், தமது திவானை அனுப்பிக் கம்பெனியை எட்டையபுரத்திற்கு அழைத்தார். அரசனின் அழைப்பை ஏற்று, எட்டையபுரம் சென்றாேம். எட்டையபுரம் கொட்டகையில் நாடகங்கள் நடை பெற்றன. அப்போது எட்டையபுரம் அரசராக இருந்தவர் குமார எட்டப்ப மகாராஜா. இவர் மிகுந்த கலையுண்ர்ச்சியுடையவர்: வயது முதிர்ந்தவர்; தாத்தா மகாராஜா என்றுதான் இவரைக் குறிப்பிடுவார்கள். இவரது புதல்வர்கள் இருவ மூத்தவர் தங்க மகாராஜா. இளையவர் காசி மகாராஜா. எல்லோரும் கலையறிவு நிறைந்தவர்கள். ஊருக்குப் பொதுவாக அமைக்கப் பெற்றிருந்த நாடக அரங்கத்தைத் தவிர, அரசருக்கென்றும், அவரது புதல்வர்களுக்கென்றும் தனித்தனியாகப் பல நாடக அரங்குகள் அங்தவர் அரண்மனைக்குள்ளேயே அமைக்கப் பெற்றிருந்தன. தாத்தா மகாராஜாவுக்கு முன்னர் அரசராக இருந்தவர் ராஜா ஜெகவீர ராம வெங்கடேசுர எட்டப்பர். அவர் காலமாகிவிட்டதாலும், அவருக்குப் புதல்வர்கள் இல்லாததாலும் ஜமீன் பட்டம் அவரது சிற்றப்பாவாகிய இளைய பரம்பரைக்கு வந்து விட்டது.

தாத்தாவின் அறிவுரை

எட்டையபுரம் போன இரண்டாம் நாள் நாங்கள் அனைவரும் தாத்தா மகாராஜாவைப் பார்க்கப் போனோம். பிரம்மாண்டமான அரண்மனை, அதற்கு முன் அதைப் போன்ற ஒருகட்டிடத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. அரசர் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் போலவே இடுப்பில்