பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156


“நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடைபெற்றபோது நான் அடிக்கடி வந்து பார்த்திருக்கிறேன். பால பார்ட்டுகள் இந்தப் பாடலைத் தினமும் பாடுவதைக் கேட்டிருக்கிறேன்” என்றார். எனக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. “சரி, நீயே சொல்லிக் கொடு” என்று சொல்லி விட்டு, நான் வேறு வேலையைக் கவனிக்கச்சென்றேன். பாடம் சொல்லிக்கொடுத்த முதல் நாளே ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர் யார் தெரியுமா? அவர்தாம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன். விளையும்பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அதைப்போல என். எஸ். கிருஷ்ணன், வருங்காலத்தில் மகோன்னதமாக விளங்கப்போகிறார் என்பதை அவரது இளம் பருவச் செயல்கள் காட்டின.

விளையாட்டுத் திறன்

மாதம் பதிமூன்று நாடகங்கள் நடந்துகொண்டிருந்த காலமாதலால் எங்களுக்கு நிறைய ஒய்வுண்டு. ஒய்வுநேரங்களில் பலீன் சடுகுடு, கிளிதட்டு, நொண்டி, பிள்ளையார் பந்து முதலிய பலவிதமான விளையாடல்களை நாங்கள் ஆடுவோம். எந்த விளையாட்டுக்கும் இரண்டு கட்சி உண்டல்லவா? கட்சி பிரிக்கும் போது ஒவ் வொருவரும், என். எஸ். கிருஷ்ணன் எந்தக் கட்சியில் இருக்கிறாரோ, அந்தச் கட்சியில் சேரவே விரும்புவார்கள். ஏன் தெரியுமா? என். எஸ். கிருஷ்ணன் இருக்கும் கட்சி கண்டிப்பாய் வெற்றி பெறும். நான் எப்போதும் என். எஸ். கே. கட்சியில் தான் சேருவேன்.

‘கிளித்தட்டு’ என்பது ஒரு நல்ல விளையாட்டு, அதில் ஒவ்வொரு கட்சியிலும் கிளியாக இருப்பவருக்குச் சில தனி உரிமைகள் உண்டு. கட்டத்தைச் சுற்றி வரவும், குறுக்கே தாண்டியடிக்கவும் கிளிக்கு மாத்திரம் உரிமையுண்டு. இந்த ஆட்டத்திலும் வழக்கமாக என். எஸ். கே. கட்சிதான் வெற்றி பெறும். அவர் கிளியாக நின்று அற்புதமாக விளையாடுவார். வழக்கமாக அவர் கட்சி ஜெயிப்பதைக் கண்டதும், நாங்கள் எல்லோரும் அவரை இரு கட்சியாருக்கும் பொதுக் கிளியாக இருக்க வேண்டுமென்று சொல்வோம். அவ்வாறே அவர் பொதுக்கிளியாக இருந்து, ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் தம் கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பார்.