பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244


ததால், அந்நாடகங்கள் முடிந்த பிறகு அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டார். வந்தவர்களோ உடனடியாகப் போக வேண்டுமெனப் பிடிவாதம் பிடித்தார்கள். நடிகனும் அவர்களோடு போகத் துடித்தார். அன்றிரவு நாடகத்தில் நடிக்க அவரைத் தவிர வேறு ஆள் இல்லை. பெரியண்ணா நயமான முறையில் எவ்வளவோ எடுத்துச் சொன்னார். அலுவல் அறையில் நீண்டநேரம் நடந்து கொண்டிருந்த இந்த உரையாடலை நாங்கள் தலைமறைவாக நின்று கேட்டுக் கொண்டிருந்தோம். நடிகரின் தமையன் ஒரே கூச்சல் போட்டார். பெரியண்ணா காட்டிய பொறுமை எங்களுக்குப் பெரு வியப்பை அளித்தது. கூச்சல் போட்டவரின் ஆவேசம் உச்சநிலைக்குப் போய்க்கொண்டிருந்தது. கடைசியாகப் பெரியண்ணா சிறிது கோபத்தோடு, “நாடகம் முடிந்தபிறகுதான் அவனே அனுப்பமுடியும். எந்தக்காரணத்தைக் கொண்டும் இப்போது அனுப்ப இயலாது” என்று கூறினார். இது கேட்டதும் நடிகரின் தமையன் மேலும் ஆத்திரம் அடைந்தார். “அதெல்லாம் முடியாது. உங்கள் நாடகத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை; நாங்கள் இப்போதே புறப்படத்தான் போகிறோம்”, என்று சொல்லிவிட்டுத் தன் தம்பியைப் பார்த்து “எடுடா பெட்டி படுக்கையை” என்றார். அண்ணன் இப்படிச் சொல்லு முன்பே ஆயத்தமாக இருந்த நடிகத் தம்பி, உடனே பெட்டி படுக்கையோடு புறப்படச் சித்தமானார். தமையனும், மாமனும் முன்னை செல்லத் தம்பி அவர்களைப் பின் தொடர்ந்தார். மூவரும் அலுவல் அறையைத் தாண்டினார்கள்.

வெறி கொண்ட வேங்கை!

‘பளார்’ என்றாெரு சத்தம். அதைத்தொடர்ந்து “ஐயோ’’ என்ற அலறல்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. எட்டிப் பார்த்தேன். நடிகரின் தமையன் அடி பொறுக்க முடியாமல் கீழே கிடந்தான். அவன் எதிரே வெறி கொண்ட வேங்கை போல் ஒரு மனித உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து வார்த்தைகள் வேகமாக வந்தன. “இன்னக்கே புறப்படத்தான் போறயா! எங்கடா புறப்படு! நீ பொறப்பட்டுப் போறதை நான் பார்க்கிறேன்” என்ற வார்த்தைகளோடு கீழே கிடந்தவனுக்கு, மேலும் சில அடிகள் விழுந்தன. நடிகர் பெட்டி