பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245


படுக்கையைப் போட்டு விட்டு அலறிய வண்ணம் உள்ளே ஓடினார். மாமனார் செய்வதறியாது ஒரு மூலையில் ஒதுங்கினார். தமையன், “ஐயோ, கொல்றானே” என்று ஒலமிட்டார். பெரியண்ணா விரைந்து சென்று அந்த வேங்கையைப் பிடித்து அடக்கினார். மனித உருவில் நின்ற அந்த வேங்கைதான் தம்பி பகவதி. அப்போது தம்பி பகவதிக்கு வயது பதினான்கு-நடிகருக்கும் ஏறத்தாழ அதே வயதுதான் இருக்கும். அடிபட்ட தமையனருக்கு இருபத்தி ஐந்து வயதுக்குமேல் இருக்கலாம். எதற்காக இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன். தெரியுமா? பகவதியுடைய முரட்டுத்தனம், உடல் வலிமை, தீமையை எதிர்க்கும் போக்கு, இவற்றையெல்லாம் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறதல்லவா? இதன் பிறகு அந்த நடிகர் மதுரை நாடகங்கள் முடியும் வரை கம்பெனியில் இருந்து விட்டுத்தான் போனார்; தேசபக்தியில் நாகநாதனின் காதலி சுந்தரியாகவும் அவர் நடித்தார்.

தேசீய நாடகத்திற்குத் தடை

தேசபக்தி நாடகத்தோடு மதுரை முகாம் முடிந்தது, திருநெல்வேலியில் நாடகம் துவக்கினோம். தேசபக்தி நாடகத்திற்குப் போலீஸ் அதிகாரிகள் வந்து குறிப்பெடுத்துக் கொண்டு போனார்கள். நாடகம் முடிந்த மறுநாள்காலை கம்பெனி வீட்டிற்கு இரண்டு போலீசார் வந்தார்கள். உரிமையாளரையும், நாடக ஆசிரியரையும் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும்படி இன்ஸ்பெக்டர் உத்திரவென்று கூறினார்கள். பெரியண்ணா வெளியூர் போயிருந்தார். சிற்றப்பா தம் மனைவியோடும் எங்கள் தங்கைகளோடும் மதுரையிலேயே இருந்தார். கம்பெனியின் பிரதிநிதிகளாக சின்னண்ணா டி. கே. முத்துசாமியும், என்.எஸ். கிருஷ்ணனும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். இன்ஸ்பெக்டர் அவ்விருவரிடமும் பல கேள்விகளைக் கேட்டார். கடைசியாகத் தேசபக்தி நாடகம் நடைபெற வேண்டுமானல் தாம் சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இல்லையானால் நாடகம் தடை செய்யப்படுமென்றும் கண்டிப்பாகக் கூறினார் இன்ஸ்பெக்டர். அவருடைய ஆட்சேபனைகள் என்னவென்பது வாசகர்களுக்குச் சுவையாக இருக்கும்.