பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246


ஆட்சேபணைகள்

முதல் காட்சியில் நாங்கள் சொற்பொழிவு நிகழ்த்துவோம். என்.எஸ்.கிருஷ்ணன், சி. ஐ. டி.யாக வேடம் புனைந்து தோன்றுவார். எங்கள் பேச்சுக்களைக் குறிப்பெடுக்கும்போது அதற்கேற்றவாறு உணர்ச்சிகளைத் தம் முகத்திலே தோற்றுவிப்பார். நான் பேசும்போது, “இதோ எங்கள் சொற்பொழிவைக் குறிப்பெடுக்கிறாரே, இவரும் நம் நாட்டவர்தாம். நமது சகோதரரில் ஒருவர்தாம். ஆனால் இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டில் வளர்ந்து, இந்த நாட்டு உப்பையே தின்று கொண்டிருக்கும் இந்த மனித உருவம் தம் சொந்தச் சகோதரர்களையே அன்னிய நாட்டானுக்குக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலைச் செய்து கொண்டிருக்கிறது! பாவம். என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்பு!” என்றுகூறுவேன். உடனே என். எஸ். கிருஷ்ணன் கை கால்களெல்லாம் பதற்றத்தால் ஆடுவது போல நடிப்பார். சபையோர் கைதட்டிச் சிரிப்பார்கள். இன்ஸ்பெக்டர் இந்தக் காட்சியில் என். எஸ். கிருஷ்ணன் வரக்கூடாதென்று ஆட்சேபித்தார்.

இரண்டாவதாக, சுதந்திர வீரன் புரேசனும், ஒருமித வாதக் கனவானும் பேசிக் கொள்ளும் காட்சி. மிதவாதி சர்க்கார் கட்சியைத் தாங்கிப் பேசுவார். நீண்ட நேரம் வாதம் நடை பெறும். முடிவில் நான் ஆவேசத்துடன், “தாய்நாட்டை அன்னியருக்குக் காட்டிக் கொடுக்கும் சண்டாளர்கள், தம் தாயை மாற்றாரிடம் கூட்டிக் கொடுக்கும் கொடுமையைச் செய்கிறார்கள் என்று ஏன் சொல்லக் கூடாது?” என்று கேட்பேன். இந்தக் காட்சியிலும் என். எஸ். கே. தான் மிதவாதியாக வருவார். என் கேள்விக்கு விடையாக அவர் கொடுக்கும் முகபாவமும், ஆத்திரத் தோடு நடந்து கொள்ளும் நடிப்பும் சபையோரிடையே பெருங் கோஷத்தை எழுப்பும். இந்தக் கேள்வியையும் இன்ஸ்பெக்டர் ஆட்சேபித்தார்.

மூன்றாவதாக, நாடகத்தில் இறுதியாக வரும் சண்டைக் காட்சியில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தலைமையில் ஒரு தொண்டர் படை காட்சியளிக்கும். படையின் தளபதி கலைவாணர் பெரிய கைராட்டை ஒன்றைக் கையில் தாங்கிய வண்ணம் தோன்றுவார். இந்தக் காட்சியில் கொட்டகையே கலகலத்துப்