பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248


நிலத்தை அடமானம் வைத்தோம்

திருநெல்வேலி நாடகம் முடிந்தபின் ஸ்ரீவைகுண்டம், சாத்துார், விருதுநகர் ஆகிய ஊர்களுக்குச் சென்றோம். விருது நகரில் மானேஜர் காமேஸ்வர ஐயர் வந்து தமது பாக்கிப் பணத்திற்காக தொந்தரவு கொடுத்தார். ஏற்கனவே அவருடைய கடன் பாக்கிக்கு நோட்டு எழுதிக் கொடுத்திருந்தமையால் எவ்விதச்சமாதானமும் கூறமுடியாமல் பெரியண்ணா தயங்கினார். அப்போது எங்களுக்கிருந்த சொற்ப நிலத்தை அடமானம் எழுதிக் கொடுத்துப் பணம் வாங்க முடிவு செய்தார். இதற்காக நாங்கள் சகோதரர்கள் நால்வரும் நாகர்கோவிலுக்குப் போகவேண்டியதாக இருந்தது. ஒருநாள் நாடகம் முடிந்ததும், நால்வரும் புறப்பட்டு நாகர்கோவில் போய்ச்சேர்ந்தோம். அன்றே ஒருவரிடம் நிலத்தை அடமானப்படுத்தி இரண்டாயிரம் ரூபாய்கள் பெற்றோம். நெல்லேயில், இதற்காகத் தங்கியிருந்த காமேஸ்வர ஐயரிடம் அவருடைய பாக்கியைக் கொடுத்துத் தீர்த்துவிட்டு விருதுநகருக்கு ரயிலேறினோம். அந்த ரயில் எப்போதும் இரவு 10 மணிக்குத்தான் விருதுநகருக்கு வருவது வழக்கம். இரவு 9-30 மணிக்கு விருதுநகரில் மேனகா நாடகம் வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நண்பர் கிட்டுராஜூ அந்நாளில் ரயில்வே அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். எஞ்ஜின் டிரைவராக நின்று ரயிலை ஒட்டுவதற்கும் அவர் நன்றாகப் பழகியிருந்தார். மணியாச்சியில் அவர் எஞ்சினுக்குள் ஏறி டிரைவரை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டுத் தாமே ரயிலை, ஒட்டினார். பத்து மணிக்கு விருதுநகருக்கு வரவேண்டிய ரயில் இரவு 9 மணிக்கே வந்து சேர்ந்தது. இப்படி நடந்திருக்குமா என்று வாசகர்களில் சிலர் நம்புவதுகூட சிரமந்தான். ஆனால் இப்போது நான் சொல்லியவை அனைத்தும் உண்மையாக நடந்தவை.

மீண்டும் செட்டி நாடு

விருதுநகருக்குப்பின் மீண்டும் செட்டிநாட்டிற்குப் பயணம் தொடங்கினோம். இம்முறை காரைக்குடி கை கொடுக்கவில்லை. புதிய நாடகம் நடத்த எண்ணி ஸ்ரீ கிருஷ்ணலீலாவைத் தயாரித்தோம். அதற்காக இந்த நெருக்கடியான கட்டத்திலும் நகைகளை யெல்லாம் அடகு வைத்துச் சாமான்களைத் தயார் செய்தோம்.