பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீர்திருத்த நாடகக் கம்பெனி


இக்காலங்களில் எல்லாம் எங்கள் குழுவைப் பற்றி மக்கள் குறிப்பிடும்போது சீர்திருத்த நாடகக் கம்பெனி என்ற சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைப்பது வழக்கம். நாடகங்களும் அதை உறுதிப்படுத்தும் முறையிலேயே நடைபெற்று வந்தன. தேசபக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர் முதலிய சமூக, தேசீய நாடகங்களே அதிகமாக நடைபெற்று வந்தன. ரங்கராஜு நாடகங்களை அறவே நிறுத்தி விட்டதால், இடையிடையே சுவாமிகளின் புராண, இதிகாச நாடகங்களையும் நடத்தி வந்தோம். இவ்விரு வகை நாடகங்களுக்கும் வருவாய் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. எப்போதாவது இராமாயணம், மனோஹரா போட்டால் அதற்கு மட்டும் கொஞ்சம் வசூல் ஆகும். சுவாமிகளின் நாடகங்களில் பாடல்கள் முக்கியமாதலால் நன்றாகப் பாடக் கூடிய இளைஞர்கள் அதிகமாக இல்லாத நிலையில் அவற்றிற்கு வரவேற்பு இல்லை. மறு மலர்ச்சி உற்சாகத்தில் பாடல்களைக் குறைத்து வந்த எங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு உற்சாகம் அளிக்கவில்லை. இருந்தாலும் பேருக்கு நடத்திக் கொண்டிருந்தோம்.

ஸ்ரீ கிருஷ்ண லீலா

அப்போது எங்கள் குழுவின் முக்கிய நடிகராக இருந்த நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி ஸ்ரீ கிருஷ்ணலீலா நாடகத்தைச் சிறந்த காட்சியமைப்புகளோடு நடத்த வேண்டுமென யோசனை கூறினார். ஏற்கனவே ஸ்ரீ கிருஷ்ண லீலாவை நடத்தி யிருக்கிறோம். என்றாலும், அவ்வளவு ஆடம்பரமாக நடைபெற வில்லை. ஆம்பூரில் இரண்டு சினிமாவும் சர்க்கஸும் எங்களுக்குப் போட்டியாக இருந்தன. நிர்வாகச் செலவும் அதிகரித்தது.